சமீபகாலமாக ஆன்லைனில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ, படங்கள் தொடர்பான செய்திகளும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற வீடியோ மற்றும் படங்களைக்கொண்டு சிறார்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
சிறார் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்காரியங்களில் ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் குற்ற கும்பலை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் 19 மாநிலங்களில், 56 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 200 -க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். சிங்கப்பூர் இன்டர்போலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ இதே விவகாரத்தில் ‘ஆபரேஷன் கார்பன்’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் ரெய்டு நடத்தியது. இந்த ஆபரேஷனில் கிடைத்த தகவல்களைக் கொண்டு குற்றவாளிகள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றைக்கொண்டு இப்போது ரெய்டு நடத்தப்பட்டதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், சிறார் ஆபாச படங்கள் ஆன்லைனில் பகிரப்படுவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. யூடியூப் சேனல்களிலும் இது போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த சேனல்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.