இந்தியன் 2: இந்த இந்தியக் கலையில் இருந்துதான் குங்ஃபூ, கராத்தே உருவானது -காஜல் நெகிழ்ச்சி

‘இந்தியன் 2’ படத்திற்காக குதிரை ஏற்றம், தற்காப்பு பயிற்சி ஆகியவற்றை நடிகை காஜல் அகர்வால் கற்று வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விபத்து ஒன்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் இந்தப் படத்தை தற்போது துவங்கி இம்மாத தொடக்கத்தில் இருந்து படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார்கள். செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்தப் படப்பிடிப்பில் கமல்ஹாசனும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் நடித்த சேனாபதி கதாபாத்திரத்தின் இளம் வயது சம்மந்தப்பட்ட காட்சிகளும் எடுப்பதாகவும், படத்தின் அந்த போர்ஷனில் தான் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. எனவே அதற்கு ஏற்ப குதிரை ஏற்றம், வாள் சண்டை, சிலம்பம், களரிப்பட்டு என்ற தற்காப்பு பயிற்சி போன்றவற்றை எடுத்து வருகிறார்.

அந்தப் பயிற்சி எடுக்கும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “களரிப்பட்டு என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலை. இது போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய கலைகளில் ஒன்று. இந்த கலையில் இருந்துதான் ஷாவ்லின், குங்ஃபூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது. இந்த களரி கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது. 3 ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை எனக்கு அளித்த எனது ஆசிரியருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் காஜல். தற்போது இந்த வீடியோக்களை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.