உத்தரக்காண்ட்: தனக்கு சொந்தமான ரிசார்ட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவு வைத்த கொள்ள மறுத்ததால், இளம் பெண் வரவேற்பாளரை கொன்று கால்வாயில் வீசிய பாஜ முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பவுரி மாவட்டத்தின் யம்கேஷ்வர் தொகுதியில் உள்ள ஹரித்துவாரை சேர்ந்தவர் வினோத் ஆர்யா. இம்மாநில பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், இம்மாநில விவசாய உற்பத்தி பொருள் வாரியத்தின் தலைவராக, அமைச்சர் அந்தஸ்தில் இருந்துள்ளார். இவருடைய மகன் புல்கித் ஆர்யா. இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது.
இதில் ரிஷிகேஷ் பகுதியை சேர்ந்த அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி பணிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யா, ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்கிதா கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை நடைபெறுவதற்கு முன், தனது முகநூல் தோழியை தொடர்பு கொண்ட அங்கிதா, ‘ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யாவும், மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் என்னை மிரட்டுகின்றனர்,’ என்று கூறி அழுது உள்ளார். இருப்பினும், விருந்தினர்களுக்கு ‘சிறப்பு சேவை’ செய்ய வேண்டும் என்று அங்கிதாவை, புல்கித் வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு அவர் மறுக்கவே ஊழியர்கள் உதவியுடன் அங்கிதாவை கொன்று சீலா கால்வாயில் வீசியுள்ளார். இந்த கால்வாயில் இருந்து அங்கிதாவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, புல்கித் ஆர்யா, சவுரப் பாஸ்கர், அங்கித் குப்தா கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது, ஒரு கும்பல் போலீஸ் வாகனங்கள் தடுத்து 3 பேரையும் கடுமையாக தாக்கியது. கும்பலிடம் இருந்து அவர்களை மீட்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* தந்தை, மகன்கள் நீக்கம்
அங்கிதா கொல்லப்பட்டதை தொடர்ந்து வினோத் ஆர்யா, புல்கித் ஆர்யாவை கட்சியில் இருந்து பாஜ நீக்கியுள்ளது. புல்கித்தின் சகோதரர் மாநில இதர பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
* பாஜ பெண் எம்எல்ஏ கார் மீது தாக்குதல்
அங்கிதா கொலையால் ஆத்திரத்தில் இருந்த மக்கள், யாம்கேஷ்வர் பாஜ பெண் எம்எல்ஏ ரேணு பிஷ்ட், சீலா கால்வாய் வழியாக சென்றபோது அவர் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.
* 8 மாதங்களுக்கு முன் மற்றொரு பெண் மாயம்
புல்கி ஆர்யாவின் ரிசார்ட்டின் பெயர் ‘வனாந்தரா.’ இதில், வரவேற்பாளராக இருந்த அங்கிதாவை புல்கித் கொலை செய்த நிலையில், அவர் மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அங்கிதாவுக்கு முன்பாக, இந்த ரிசார்ட்டில் பிரியங்கா என்ற இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களாக அவரை காணவில்லை.
* ராகுல் அதிர்ச்சி
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டரில் பதிவில், ‘உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலம் பவுரியில் நடந்த சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் பல திறமையான பெண்கள், இளம்பெண்களை சந்திக்கிறேன். ஒன்று மட்டும் தெளிவாக கூறுகிறேன், நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் போதுதான் நம் இந்தியா முன்னேறும்,’ என்று கூறியுள்ளார்.
* ரிசார்ட் தரைமட்டம்
அங்கிதா கொல்லப்பட்டதை தொடர்ந்து, ரிசார்ட் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர். விசாரணையில், அந்த ரிசார்ட் சட்ட விரோதமாக கட்டப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து, ரிசார்ட்டை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளினர்.