ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நோய்கள் தோன்றினாலும், அதற்கேற்றாற்போல நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அப்படி வளர்ச்சியடைந்த இன்றைய நவீன மருத்துவ சிகிச்சையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். கண், இரைப்பை, சிறுநீரகம், தோல் முதல் இதயம் மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது இன்றைய மருத்துவ உலகம். அதேசமயம் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், உறுப்பை தானம் செய்வோருடைய ரத்தமும், உறுப்பை பெற்றுக்கொள்பவரின் ரத்தமும் ஒத்துப்போதல் என்பதும் ஒருவகையில் முக்கியமானது.
இந்த நிலையில், டெல்லியில் மம்தா யாதவ், ஜக்ஜீத் கவுர் ஆகிய இரண்டு பெண்கள், இறுதி நிலை சிறுநீரக நோயால் (end-stage kidney disease) பாதிக்கப்பட்ட அவினாஷ் குமார் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய தங்களின் கணவர்களுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை(swap kidney transplant) மூலம் வெற்றிகரமாக சிறுநீரகத்தை தானம் செய்திருக்கின்றனர்.
ஆனால், இதில் முக்கியமானதென்னவென்றால், அவினாஷ் குமாரின் மனைவி மம்தா யாதவ், தன்னுடைய சிறுநீரகத்தை சஞ்சீவ் குமாருக்கும், சஞ்சீவ் குமாரின் மனைவி ஜக்ஜீத் கவுர், தன்னுடைய சிறுநீரகத்தை அவினாஷ் குமாருக்கும் தானம் செய்திருக்கின்றனர். அந்தந்த கணவன்-மனைவிகளுக்குள் ரத்தம் ஒத்துப்போகாததே காரணம்.
பின்னர் இது குறித்துப் பேசிய துவாரகாவின் ஆகாஷ் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷிஷ் சவுத்ரி, “இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த வழி. இருப்பினும், சிறுநீரக தானம் செய்பவர் மற்றும் பெறுநரின் இரத்தக் குழுக்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி பொருத்தமில்லாதபோது, ABO incompatible சிகிச்சை முறையும் உள்ளது. ஆனால், இது மிகவும் விலையுயர்ந்தது. எனவே, இரண்டு குடும்பங்களுக்கிடையே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இதிலும், உறுப்பு தானம் செய்பவருக்கும், பெறுநருக்கும் இடையே ரத்தம் பொருந்தவில்லையென்றால், உறுப்பு தானம் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.