எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது.
இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜி – 20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும். பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது.
ராஜஸ்தான் முதல்வர் ஆகிறார் சச்சின் பைலட் – வழி விடுகிறார் அசோக் கெலாட்!
எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.