திருச்சி: என்ஐஏ சோதனை விவகாரத்தை வைத்து திமுக தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக் கூடாது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தினார்.
திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கோயம்புத்தூர், திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் மீது ஒரு கும்பல் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தி சிலரை கைது செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு என்ஐஏவை தவறாக பயன்படுத்துவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தை வைத்து திமுக தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக்கூடாது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் 95 சதவீதம் முடிந்திருப்பதாகவே ஜே.பி.நட்டா பேசினார். ஆனால் அவர் பேசியதை தவறுதலாக புரிந்து கொண்டு சிலர் அரசியலாக்குகின்றனர்.
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா மீது தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில், அவருக்கு எதிராக பேசிய கோயம்புத்தூர் பாஜக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் இந்துக்கள் தேர்தல் நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
திமுக ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் சென்னைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளிவரும் தகவல் உண்மையல்ல என்றார்.