பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவுலானா முகமது மன்சூர் காஸிமி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி அதிகாலை 2 மணி முதல், நாடு முழுவதும் 13-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அடக்குமுறையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பல இடங்களில் சோதனைஉத்தரவு மற்றும் ஆவணங்களைக்கூட காண்பிக்காமல் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
மதுரையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியின் வீட்டுக்குள் என்ஐஏ அதிகாரி ஒருவர் பணப்பையுடன் நுழைந்துள்ளார்.அவர்களே பணத்தை கொண்டுவந்துவிட்டு, வீட்டில் கைப்பற்றியதாக பொய் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பது தெரிகிறது.
ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரது வீட்டில் வாக்கி டாக்கியை கைப்பற்றியதாக கூறுகின்றனர். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உதவிக்காக அரசு கொடுத்த வாக்கி டாக்கியைதான் வைத்திருந்ததாக அவரே தெளிவாக கூறியுள்ளார்.
கைது செய்தவர்களை எங்கு அழைத்துச் செல்கிறோம், எதற்காக கைது செய்கிறோம் என்றதகவலைக்கூட கூறவில்லை.
பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்பினர் பலரும் சுதந்திரமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுபான்மை மக்கள், சிறுபான்மை உரிமைக்காக போராடும் இயக்கங்களை பழிவாங்குவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக வெளியிட வேண்டும்.
சுயாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசின் அதிகாரங்களை மீறும் வகையிலும் இருக்கக்கூடிய இதுபோன்ற சோதனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள் வெளிப்படையாக உள்ளன. தேசியஅளவில் உறுதியாக இருப்பதால், அதை அடக்க நினைத்து மத்திய அரசு சோதனை நடத்தியுள்ளது.
இனிமேல் எங்களது கண்டனங்கள் கடுமையாக இருக்கும். என்ஐஏ சோதனை விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.