டேராடூன்: தனது சொகுசு விடுதியில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றிய 19 வயது இளம்பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை கொலை செய்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் இளம் பெண்ணின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஒரு கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில், இளம்பெண்ணின் உடலில் காயங்கள் அதிக அளவில் இருந்ததும், நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
தற்போது இதனையடுத்து மற்றொரு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உயிரிழந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த குறுஞ்செய்திகள் தற்போது ஸ்கிரீஷாட்டுகளாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
படுகொலை
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் யம்கேஷ்வர் தொகுதியில் பாஜக தலைவரின் மகனுக்கு சொந்தமான ரிசார்ட்டில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் பாஜக தலைவரின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து தற்போது இளம்பெண்ணின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாலியல் தொழில்
இன்று வெளியான உடற்கூராய்வு அறிக்கையில் இளம் பெண்ணின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது, ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து உயிரிழந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தோழிகளிடம் விளக்கியுள்ள வாட்ஸ்அப் குறுந்தகவல்களின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் தனது நண்பருக்கு, “இங்கு உள்ளவர்கள் என்னை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அப்பெண் தனக்கு நேர்ந்ததையும் கூறியுள்ளார்.
நண்பர்
அதாவது, தன்னை தவறான இடங்களில் ஒருவர் தொட்டதாகவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இங்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்பா எனும் போர்வையில் ‘சிறப்பு சேவை’ செய்தால் ரூ.10,000 கொடுப்பதாகவும் ரிசார்ட் தரப்பில் தன்னை அணுகியதாகவும் இளம்பெண் கூறியுள்ளார். மேலும் தனக்கு இங்கு தொடர்ந்து பணி செய்ய விருப்பமில்லை என்பதையும் தனது தோழிக்கு அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தனது பேஸ்புக் நண்பருக்கும் அந்த இளம்பெண் பகிர்ந்திருக்கிறார்.
தொடர்பு கொள்ள முடியவில்லை
சம்பவம் நடந்த இரவு இந்த பேஸ்புக் நண்பருக்கு இளம்பெண்ணிடமிருந்து தொலைப்பேசியில் அழைப்பு வந்திருக்கிறது. திரும்ப அழைத்தபோது அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. மீண்டும், ரிசார்ட் ஓனரான புல்கித் ஆர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தூங்க வந்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் ரிசார்ட் மேனஜருக்கு அழைத்தபோது அவர் ஜிம்மில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளிலிருந்து இளம்பெண் காணாமல் போயுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் விஷயங்கள் வெளியாகியுள்ளன.