பாட்னா,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் சென்றுள்ளார். அங்கு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நேபாள எல்லை பகுதியை பாதுகாத்து வரும் சஷாஸ்திர சீமா பல் படைப்பிரிவை சேர்ந்த வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் பதேப்பூர், ராணிகஞ்ச், பெரியா உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:- எல்லை பகுதி உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடந்த 2008 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கே செலவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்து விட்டது.
அந்தவகையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு எல்லையோர உள்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.44,600 கோடி ஆகும். இதன் மூலம் எல்லைப்புற சாலையின் நீளம் 3½ மடங்கு அதிகரித்து விட்டது. எல்லையில் உள்ள நமது வீரர்களும் தேசிய பேரிடர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் நிபுணத்துவத்துடன் செயல்படுகிறார்கள். இதை உணர்ந்து, அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சஷாஸ்திர சீமா பல் படைப்பிரிவினர் நேபாளம் மற்றும் பூடான் போன்ற நட்பு நாடுகளுடன் எல்லைகளை காக்க வேண்டிய எளிதான பணிகளை மேற்கொள்வதாக சாதாரணமாக தோன்றலாம்.ஆனால் வேலி இல்லாத பகுதிகளில் ரோந்து செல்வது கடினமானது என்பதால், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான் என்பதை நாங்கள் அறிவோம்.
உள்ளூர் மக்களிடையே உங்களது நல்லுறவு மற்றும் நல்லெண்ணம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீடுகள் தோறும் தேசியக்கொடி திட்டத்தில் இந்த படைப்பிரிவு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். 10 லட்சம் தேசியக்கொடிகளை குடிமக்களுக்கு வழங்கினர்.தேசியக்கொடியுடன் நீங்கள் சென்ற ஒவ்வொரு வீட்டிலும், பாதுகாப்புப் படைகளுடன் பிணைப்பு வளர்த்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.