பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள ஜி ஜிங்பிங்தான் தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். இங்கு சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
இவ்வாறு இருக்கையில், தற்போது சீனாவில் அந்நாட்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதே வேலை
ஏறத்தாழ இந்தியாவும் சீனாவும் ஒரே காலகட்டத்தில்தான் சுதந்திரம் அடைந்தன. ஆனால் தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா வளர்ந்து நிற்கிறது. மட்டுமல்லாது அமெரிக்காவின் பொருளாதாரத்தை விரைவில் முந்தி விடும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே சீனாவுக்கு எதிரான கருத்துக்கள் அவ்வப்போது மேற்கு உலகம் சார்பில் கட்டவிழ்த்து விடப்படுவது இயல்பான ஒன்றுதான்.
வளர்ச்சி
இதற்கு காரணம் சீனாவின் பொருளாதார கொள்கைதான். கடந்த 1978ல் இந்த பொருளாதாரக் கொள்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தற்போது வரை அந்நாட்டில் வறுமையிலிருந்து சுமார் 500 மில்லியன் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறத்தில் கல்வி, சுகாதாரத்திலும் வளர்ச்சி முன்னேற்றப்பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா தொற்றை சீனா எவ்வாறு எதிர்கொண்டது என்பதிலிருந்து அந்நாட்டின் வளர்ச்சி யாருக்கானது? எவ்வாறாக? இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
வதந்தி
நிலைமை இவ்வாறு இருக்க, அவ்வப்போது சீனாவுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்படுவது இயல்புதான். அந்த வகையில் தற்போது அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்க் பிங்க் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் இருக்கிறார் என்றும், ராணுவ புரட்சி நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிவிட்டரில் #ChinaCoup எனும் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சனிக்கிழமையான நேற்று பெய்ஜிங்கிலிருந்து எந்த விமானங்களும் பயணம் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
விமான சேவை
மேலும், நாட்டின் அனைத்து பகுதியிலும் பேருந்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 22ம் தேதி டிவிட்டரில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இது ராணுவ புரட்சியை உண்மை என்று உறுதி செய்யும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளது. அதில், சுமார் 80 கி.மீ நீளத்திற்கு ராணும் அணிவகுத்து நிற்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த வீடியோவின் உண்மை தன்மையை சரியாக ஆராய முடியவில்லை. இந்த வதந்தி குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் கூட சமீபத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.