கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணையில் “கிப்ட் திலேப்பியா” ரக மீன் குஞ்சுகள் இவ்வாண்டு 25 லட்சம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும், கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணையில் பல இன மீன் குஞ்சுகள் பொறிப்பக மையம், இந்திய அரசு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக உரிய அனுமதியுடன் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் “கிப்ட் திலேப்பியா” மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா ரக தாய் மீன் குஞ்சுகள் நான்கு குடும்பங்களாக, விஜயவாடா ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் இருந்து பெற்று வரப்பட்டு, நான்கு குடும்பங்களின் தாய் மீன்களை ஆண், பெண் என பிரித்து பராமரிக்கப்பட்டு, அதனை மாற்று இனக்கலப்பு செய்து, தலைமுறைகள் உருவாக்கப்பட்டு, இதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகளை முறையாக பராமரிக்கப்பட்டு, இன முதிர்ச்சி அடையும் வரை குளங்களில் பராமரிக்கப்பட்டு, இனமுதிர்ச்சி அடைந்தவுடன், அதனை 2:1 என்ற விகிதத்தில் (2 பெண், 1 ஆண்) சிறிய அளவுள்ள டப்பாக்களில் தினந்தோறும் உணவிட்டு பராமரிக்கப்படுகிறது.
இம் மீன்களில் பெற்றோர் பாதுகாப்பு முறை உள்ளதால், பெண் இடும் முட்டைகளை கருவுருதலுக்கு பின்பு தனது வாயில் முட்டைகள் அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டு 48 மணி நேரம் அடைகாக்கும். இவ்வாறு அடைகாக்கும் தருணத்தில் அம் மீன்களை பிடித்து, அதன் வாயில் உள்ள முட்டைகள் அனைத்தையும் சேமித்து, நன்கு கழுவி உப்பு நீரில் முக்கி எடுத்து, கிருமி நீக்கம் செய்து, பின்னர் அந்த முட்டைகள் மீது நீரினை தொடர்ச்சியாக பீய்ச்சி அடிக்கும் தன்மை கொண்ட ஜார்களில் இடப்பட்டு ஓடவிடப்படுகிறது. அவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் சமயம் 48 மணி நேரத்திற்கு பின் மீன்குஞ்சுகள் பொறித்து வெளியேற ஆரம்பிக்கும்.
இவ்வாறு வெளியேறும் மீன் குஞ்சுகளுக்கு ஹார்மோன் கலந்து தயாரிக்கப்பட்ட உணவினை இட்டு அறைக்குள் 7 நாட்கள் மற்றும் அறைக்கு வெளியே 14 நாட்கள் என மொத்தம் 21 நாட்கள் பராமரிக்கப்பட்டு, பால் இனமாற்றம் செய்யப்பட்டு, அதாவது ஆண் மீன் குஞ்சுகளாக உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் பண்ணை குட்டை மற்றும் பயோபிளாக் முறையில் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்திய அரசின் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணைக்கு “கிப்ட் திலேப்பியா” மீன் குஞ்சு உற்பத்தி இலக்கு கடந்த 2021-22ம் ஆண்டு 24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த இலக்கு முடிக்கப்பட்டது. இவ்வாண்டு (2022-23) 25 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திலேபியா ரக மீன் குஞ்சுகள் 1.5 செமீ முதல் 2 செ.மீ வரை உள்ள குஞ்சுகள் ₹2க்கும், 2 செமீ முதல் 3 செமீ வரை உள்ள குஞ்சுகள் ₹3க்கும், 3 செமீ.க்கு மேல் உள்ள குஞ்சுகள் ₹4 எனவும் விற்பனை செய்ய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விலை பிற மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும் போது ஒவ்வொரு மீன் குஞ்சுக்கும் 50 பைசா கூடுதலாக விற்பனை செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் “கிப்ட் திலேப்பியா” மீன் குஞ்சுகளை அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் மீன் குஞ்சுகளை பண்ணை குட்டைகளுக்கு உள் மடை, வெளி மடை அமைப்புகள் வேறு நீர் நிலைகளில் கலக்காதவாறு வலைகள் இட்டு பராமரிக்க வேண்டும். மேலும், பறவைகள் மற்றும் இதர வேட்டையாடும் உயிரினங்களில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பு வலைகள் இட வேண்டும். இவ்வாறு பராமரிப்பு செய்யப்பட்டு, இம்மீன்களை வளர்க்கும் சமயம், இவை 140 நாட்களில் 400 கிராம் அளவிற்கு வளரும் தன்மை கொண்டதாகும்.
இம்மீன்கள் அதிக முள் இல்லாத மீன்களாகவும், அதிக சதை பிடிப்புடனும் காணப்படும். மேலும், இந்த ரக மீன்கள் சுவை மிகுந்து உள்ளதால் மக்களிடம் வரவேற்பினை கொண்டுள்ளது. இதன் தோல் பகுதியினை கொண்டு தீக்காயங்கள் நீக்கும் மருத்துவ ரீதியான பயன்பட்டிற்கும், அதிக சதை பகுதிகள் வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணி ஈட்டும் விதமாக உள்ளதால், இந்த ரக மீன்கள் வளர்ப்பில் தற்போது விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த ரக மீன்களை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் பண்ணை குட்டைகளில் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.