கேன்சருடன் போராடிய கேஜிஎப் நடிகருக்கு ஜெயிலர் படத்தில் வாய்ப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்னிந்திய மொழியை சேர்ந்த பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். மலையாளத்திலிருந்து விநாயகன், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் இதில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் ராய் என்பவர் தற்போது ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேஜிஎப் படத்தில் நாயகன் யாஷ்ஷுக்கு ஆதரவாக படம் முழுதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த ஹரிஷ் ராய்.

கடந்த சில மாதங்களாகவே புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஹரிஷ் ராய். அந்த சமயத்தில் நடிப்பின் மீதான தனது ஆர்வம் குறைந்து விடாமல் இருப்பதற்கும் புற்றுநோய் காரணமாக தனது குரல் மங்கிப் போய்விடாமல் இருப்பதற்கும் மருத்துவமனையிலேயே விதவிதமாக நடித்து சில வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கு பலனாக தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

இதுகுறித்து ஹரிஷ் ராய் கூறும் போது, இந்த இக்கட்டான சமயத்தில் என் மனதை தளர விடாமல், என்னை கைவிடாமல் காப்பாற்றி இப்படி ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி. ரஜினிகாந்த்துடனும் சிவராஜ்குமாருடனும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறேன். இது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் மருத்துவமனையில் இருந்தபோது இவரை தொடர்பு கொண்டு சாம்பிள் வீடியோ அனுப்பச்செய்து அதன் மூலம் இவரை ஓகே செய்தாராம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.