கொச்சியில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேருக்கு செப். 30-ம் தேதி வரை என்ஐஏ காவல்

கொச்சி: கொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேரை இம்மாதம் 30-ம் தேதி வரை என்ஐஏ காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழகம், கேரளா, உட்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 45 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 13 பேர் மீது, யுஏபிஏசட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை மேல் விசாரணைக்காக காவலில் அனுப்ப வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேரை செப்டம்பர் 30-ம் தேதி வரை என்ஐஏ காவலில் அனுப்ப உத்தரவிட்டனர். காவல் முடிந்ததும் செப்.30-ம் தேதி அவர்களை மீண்டும் ஆஜர்படுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிஎஃப்ஐ அமைப்பினரை, கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோது, அவர்கள் கோஷமிட்டனர். நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் கோஷமிட்டதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது: கேரளா பிஎஃப்ஐ அமைப்பினர், முஸ்லிம் இளைஞர்களை லஷ்கர் -இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களில் சேர ஊக்குவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். பல்வேறு மதத்தினர் மற்றும் குழுக்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் சதி செய்தனர்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் அரசின் கொள்கைகள் குறித்து தவறாக விளக்கி இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை குறிவைத்து, ஹிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டிருப்பது அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இவ்வாறு என்ஐஏ கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.