உ.பி-யில் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே சமீபகாலமாகவே மோதல்போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் செய்த செயல்கள் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் செயலை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டு, “சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் கெடுக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். மக்களின் பிரச்னைகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை. ஆனால், சட்டப்பேரவையைப் பொழுதுபோக்கு இடமாக வைத்துள்ளனர். இது மிகவும் இழிவான மற்றும் வெட்கக்கேடான செயல்” என விமர்சித்திருந்தது.
மேலும் அந்த வீடியோவில் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி என்பவர் செல்போனில் ரம்மி விளையாடுவதும், மற்றொரு எம்.எல்.ஏ ரவி ஷர்மா புகையிலை போடுவதும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும், இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோக்களுக்கு பா.ஜ.க இன்னும் அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.