சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவல் ஜின்பிங் விவகாரத்தில் மர்மம்: வேடிக்கைக்காக கிளப்பிய தகவலா?

புதுடெல்லி,: சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என கருதப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் பற்றி சீனா அரசோ, அதன் நட்பு நாடுகளோ விளக்கம் அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீன  அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தானில் நடந்த  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, கடந்த 16ம் தேதி நாடு திரும்பிய போது சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் பீஜிங்கை நோக்கி 80 கிமீ நீளத்துக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து  வருவதாகவும், ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருப்பதாகவும், சீன விடுதலை ராணுவத்தின் தளபதி லீ சாவ்மிங் புதிய அதிபராக பதவியேற்று இருப்பதாகவும் கூட தகவல்கள் பரவின.

இதனால், உலகளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், உலக நாடுகளின் ஊடகங்கள் செய்த சரிபார்ப்பில், சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் முன்பாக, ஜின்பிங்  கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் வேடிக்கைக்காக தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான சீனர்களும் அதை விரைவாக பதிவிட்டு பரப்பி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால், சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி பறிக்கப்பட்டு இருப்பதாகவும்,  ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவம் உலகமே அல்லோகலப்பட்டு கொண்டிருக்கும் போது, சீனா மட்டும் அமைதியாகவே உள்ளது. இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதன் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ரஷ்யா போன்றவையும் அமைதியாக இருக்கின்றன. இதனால், இந்த ராணுவ புரட்சி தகவலில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.

*சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு  உஸ்பெகிஸ்தான் சென்று திரும்பிய அதிபர் ஜின்பிங்கும் தனிமைப்படுத்துதலில் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

* சீன அதிபராக கடந்த 2012ம் ஆண்டில் ஜின்பிங் பதவியேற்றார்.

* சீனாவில் யாரும் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தது. 2018ம் ஆண்டில்  ஜின்பிங்கிற்காக இது மாற்றப்பட்டு, வாழ்நாள் அதிபராக அறிவிக்கப்பட்டார்.

* இவருடைய 2வது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, 3வது முறையாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க, அடுத்த மாதம் 16ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை கூட்டம் கூட்டப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.