ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
‘காட்ஃபாதர்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் இப்போது சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டோலிவுட்டில் காத்திருக்கும் தாறுமாறான சம்பவம்
டோலிவுட்டின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் படங்களை டோலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஆச்சார்யா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், சிரஞ்சீவி நடித்துள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என தெலுங்கு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சிரஞ்சீவியுடன் சல்மான் கான், பிரபுதேவா
காட்ஃபாதர் மலையாளத்தில் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினா தாமஸ் நடித்திருந்தனர். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேங்ஸ்டர் கேரக்டரில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், பிருத்விராஜ் கேரக்டரில் கேமியோ ரோல் செய்துள்ளார். இந்தப் படத்தில் இருவரும் இணைந்து “தார் மார் தக்கர் மார்” என்ற பாடலில் நடனம் ஆடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராப் செய்துள்ளதுடன், இருவருடனும் இணைந்து செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.
காட்ஃபாதர் சென்சார் அப்டேட்
பொலிட்டிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள காட்ஃபாதர் படத்தில், சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகியோருடன் நயன்தாராவும் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், காட்ஃபாதர் சொன்னபடி ரிலீஸாகும் என தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் சென்சார் அப்டேட்டையும் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது. இதனால், படத்தில் சிரஞ்சீவியின் ஆக்சன் காட்சிகள் தரமாக இருக்கும். ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
ஓடிடி உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
மலையாளத்தில் ‘லூசிபர்’ சூப்பர் ஹிட் அடித்ததால், தெலுங்கில் காட்ஃபாதரும் தரமான சம்பவம் செய்யும் என சொல்லப்படுகிறது. இதனால், காட்ஃபாதர் படத்தின் ஓடிடி உரிமைக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஓடிடி ரைட்ஸை வாங்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 5ம் தேதி காட்ஃபாதர் வெளியாகவுள்ளதால், அடுத்தடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 28ம் தேதி மாலை ஆந்திர மாநிலம் அனந்தபூரில் பிரம்மாண்டமான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.