ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடந்த ஜூலை 8ம் தேதி அன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் . இச்சம்பாவம் ஜப்பான் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே என்பது குறிப்பிடத்தக்கது.
ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந் தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ந் தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது.
இதுபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், “அரசு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிறபோது, அது ஜப்பான் என்றைக்கும் வன்முறைக்கு அடிபணியாது என்பதை காட்டும். சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கவும் வகை செய்யும்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர்மோடி நேரில் கலந்துகொள்கிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஷின்ஜோ அபேயின் மறைவுக்கு பிரதமர் மோடி விடுத்த இரங்கல் செய்தியில், தனது அன்பு நண்பர் என்று அவரை குறிப்பிட்டதுடன் அவருடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டது நினைவுகூரத்தக்கது. பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது, அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசுகிறார்.
இந்த நிலையில் ஷின்ஜோ அபேவின் இறுதி நிகழ்ச்சிக்கு பெரும் தொகை செலவிடப்பட்ட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது ஒலிம்பிக் போட்டிக்கு ஒதுக்கப்படும் தொகையை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. இது ஜப்பானில் பொது மக்களிடையே பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது.