டாக்டர்கள் தேதி அறிவித்த பிறகும் கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்காததால் அதிர்ச்சி; ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்: பணம் பறிக்க போலி சிகிச்சையா?

திருமலை: டாக்டர் அறிவித்த தேதியில் குழந்தை பிறக்காததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகாவரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(25). இவரது கணவர் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா (30). இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் சத்யநாராயணா, மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது உடல்நலம் பாதித்ததால் காக்கிநாடா காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதி, மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன் வீடு திரும்பினர். தலைபிரசவம் என்பதால் மாமியார், மாமனார், கணவர் என அனைவரும் மகாலட்சுமி நன்றாக கவனித்து கொண்டனர். மாதந்தோறும் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து செப்டம்பர் 22ம் தேதி பிரசவ தேதி என தெரிவித்துள்ளனர். இதன்பிறகு சில வாரங்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரசவ தேதி என தெரிவிக்கப்பட்ட கடந்த 22ம் தேதி மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. அன்றிரவு ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன்செய்து பார்த்தபோது மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்று தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வழக்கமாக சிகிச்சை பெற்று வந்த காக்கிநாடா காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் சென்று கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மகாலட்சுமியின் உறவினர்கள் மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

‘’கர்ப்பமாக இருப்பதாக கூறி மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பணத்தை வசூலித்து மருந்து, மாத்திரைகளை கொடுத்து போலியான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது’ என்று மகாலட்சுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி அறிந்ததும் காந்திநகர் போலீசார் சென்று சமாதானம் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘எங்கள் மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே மகாலட்சுமி குடும்பத்தினர் போராட்டம் நடத்தி உள்ளனர். மகாலட்சுமிக்கு மாதந்தோறும் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள், ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஒருமுறை கூட ஸ்கேன் செய்யவே இல்லை. பிரசவ தேதி குறித்து நாங்கள் கூறவே இல்லை’’ என்றனர். இதனிடையே மகாலட்சுமிக்கு ஸ்கேன் செய்தது, மருந்து, மாத்திரைகள் கொடுத்தது என்று அனைத்துக்கமான ரசீதுகளை சத்யநாராயணா காண்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.