திருமலை திருப்பதி குடை ஊர்வலம்; அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

ஒவ்வோர் ஆண்டு திருமலை திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ நிகழ்வின் போது சென்னையில் இருந்து வண்ன வண்ணக் குடைகள் செய்து எடுத்துச் சென்று சமர்ப்பிக்கும் வழக்கம் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இப்படிக் குடைகள் சமர்ப்பிப்பதன் தாத்பர்யம் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

திருப்பதி குடை ஊர்வலம்

1. கோயில் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்குக் குடைப்பிடிக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் உள்ளது. அப்படிப்பட்ட குடையை இறைவனுக்கு நிகராகக் கருதி வணங்கும் வழக்கமும் நம்மிடையே உண்டு.

2. மகாவிஷ்ணு எங்கெல்லாம் இருக்கிறாறோ அங்கெல்லாம் ஆதிசேஷன் உடன் இருப்பார் என்பது ஐதிகம். பெருமாள் அமரும்போது சிம்மாசனமாகவும் நிற்கும்போது பாதரட்சையாகவும் படுத்திருக்கும்போது பாம்பணையாகவும் நடக்கும்போது திருக்குடையாகவும் ஆதிசேஷன் விளங்குவார் என்பது நம்பிக்கை.

3. எட்டுவிதமான மங்கலப் பொருள்களில் ஒன்று குடை. பகவானுக்குக் குடை சமர்ப்பிப்பது பூஜை முறைகளில் ஒன்று.

4. சென்னையில் இருந்து திருமலை திருப்பதிக்குக் குடை கொண்டு செல்லும் வழக்கம் பல நூறு ஆண்டுகளாக நிகழ்வதாகச் சொல்கிறார்கள். சென்னை தேவராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கும் 11 குடைகளை வைத்து பூஜை செய்து பின் ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.

5. 11 குடைகளில் 2 குடைகள் திருச்சானூர் தாயார் சந்நிதியில் சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள 9 குடைகள் திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின்போது சமர்ப்பிக்கப்படும். பெருமாள் அடுத்த புரட்டாசி பிரம்மோற்சவம் வரை இந்தக் குடைகளின் கீழ் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

6. இன்று புறப்படும் பெருமாள் குடை வழியெங்கும் உள்ள சில கோயில்களில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பெரம்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று வில்லிவாக்கம் சௌமியப் பெருமாள் கோயிலில் இரவு தங்கும். நாளை (26.9.22) காலை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு ஊர்வலம் மீண்டும் புறப்படும்.

7. திருமுல்லைவாயில், திருநின்றவூர், திருப்பாச்சூர் வழியாகப் பயணித்து 30.9.22 அன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதியில் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

8. இந்தக் குடைகள் யானைக்கவுளி தாண்டுவது குறித்த சுவாரஸ்யமான தகவல் உண்டு. யானைக்கவுனியைக் கடக்கும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இதற்குக் காரணம் ஒரு காலத்தில் ஏழுமலையான், யானைக்கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்கள் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

9. இதுகுறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலையும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். அந்த வரிச் செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். அதில் ஆறு கதவுகள் உண்டு. அதில் ஒன்றுதான் `எலிபன்ட் கேட்’ எனச் சொல்லப்படும் யானைக் கவுனி. இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும்.

திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது. அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும், `குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா’ என்று மக்கள் விசாரிக்கிறார்கள்.

10. திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். ஏழுமலையானுக்கு நிழல்தரப்போகும் இந்தத் திருக்குடைகளை தரிசிப்பதும் வணங்குவதும் மிகவும் புண்ணியமான ஒன்று. இதன் மூலம் புண்ணிய பலன் பெருகுவதோடு பெருமாளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இன்று நடைபெற்ற விழாவில் திருக்குடைகளை தரிசிக்க வட சென்னை சென்னக் கேசவப் பெருமாள் கோயிலில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.