சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போதிய கர்ப்பிணிகள் வராததால் கர்ப்பிணி அல்லாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்துள்ளது.
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் வருடந்தோறும் வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் கர்ப்பமாக உள்ள அனைத்து பெண்களும் சாதி, மத, பேதமின்றி ஒன்று என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் அரசு சார்பில் இந்த சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. அவ்வாறு சாத்தான்குளம் வட்டாரத்திற்குட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சாத்தான்குளம் அருகே உள்ள கொளுந்தட்டு அங்கன்வாடி மையத்தில் வைத்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட மேற்பார்வையாளர் ஜெயா என்பவர் தலைமையில் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 91 அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த அங்கன்வாடி மையத்தில் ஊழியர்களாக பணியாற்றிய 5 பெண்களுக்கும் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த 5 பேரும் தற்போது கர்ப்பமாக இல்லை என்பது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 5 பேருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் சிலரின் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. போதிய கர்ப்பிணிகள் வராததால், கர்ப்பமாக இல்லாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு உத்தரவு படி கர்ப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வட்டாரத்திற்கு அரசு சார்பில் 80 ஆயிரம் ரூபாய் உணவு வகைக்காவும், வளையல்கள், மாலைகளுக்காகவும் வழங்கப்படும். மேலும் தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தால் அதற்கு தனியாக பில் கொடுத்து அரசிடமிருந்து பணம் பெறப்படும். இப்படியான சூழலில் அரசு பணத்தை வீணடிக்கும் முயற்சியாக கர்ப்பமாக இல்லாதவர்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM