மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, தென் மண்டல ஐஜி அஸ்ராக் கர்க் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பால்ராஜூக்கு சொந்தமான அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கடந்த 24-ம் தேதி மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக பால்ராஜ் கொடுத்த புகாரில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்புடைய பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்தனர். இவரது தகவலின்படி, தொடர் விசாரணை நடக்கிறது. தென் மண்டலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்க, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களிடம் கூறியது: ”தென் மாவட்டங்களில் அசம்பாவிதங்களை தடுக்க, காவல்துறையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் போலீஸார் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளை பட்டியலிட்டு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். முக்கிய நபர்களை அழைத்து, அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அமைதிக் கூட்டங்களை நடத்துகின்றனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீதும், தூண்டுவோர், கூட்டுச்சதி செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர். பெட்ரோல் நிலையங்களில் பாட்டிலில் பெட்ரோல் விற்கக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சில முக்கிய அமைப்பின் நிர்வாகிகளின் வீடு, வர்த்தக நிறுவனம், அலுவலகப் பகுதியிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுயவிளம்பரம் தேடும் நோக்கில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்.” என்றார். மதுரை எஸ்பி சிவபிரசாத் உடனிருந்தார்.