திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான 32வது எறிபந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணியும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்றது.
எறிபந்தாட்ட பெடரேசன் ஆஃப் இந்தியா மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து 32வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டி, திண்டுக்கல் பிஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஒரிசா, ஹரியானா, டில்லி ,கர்நாடகா, ஆந்திரா, இமாச்சல பிரதேசம், உட்பட 20 மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 480 பேர் பங்கேற்றனர். லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் டெல்லி அணியும் – தமிழ்நாடு அணியும் மோதின, இதில் டெல்லி அணி 15-9, 9-15, 16-14 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. அதேபோல் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும், டெல்லி அணியும் விளையாடியது. இதில், தமிழ்நாடு அணி 15-7, 15-11 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வென்று தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி துணை இயக்குநர் னுச.இவ்லின் சிந்தியா பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் தலைவர் .ரகுராம் முனைவர் வாசுதேவன், இந்திய எறிபந்து கழக பொருளாளர் மற்றும் தமிழ்நாடு எறிபந்து கழக தலைவருமான பாலவிநாயகம், இந்திய எறிபந்து கழகத்தின் பொதுச் செயலாளர் நரேஷ் மேனன் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜய், முன்னாள் மாணவர் முத்து காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM