காந்திநகர்: குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாரூதின் ஓவைசி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
இப்போது பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சியை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பல எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன.
ஓவைசி
காங்கிரஸைத் தவிர ஆம் ஆத்மி, ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும் அங்குக் காலூன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். அகமதாபாத்தில் கூட்டத்தில் பேசிய ஓவைசி, “பாஜக-ஆர்எஸ்எஸ் இப்போது புதிய நாடகத்தை ஆரம்பித்து உள்ளன.
இது தான் வேலை
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மதரஸாவிற்கு சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியை உள்ள அசாமில் மதரஸாக்கள் இடிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் மதரஸாக்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். பாஜகவிடம் வளர்ச்சி என்று காட்ட எதுவும் இல்லை.. அவர்கள் இந்து-முஸ்லிம்கள் சண்டையிடுவதை மட்டுமே காட்டுவார்கள்.
முடியுமா
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவைச் சந்தித்து, அவருக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா? அவரை பாலியல் பலாத்காரம் செய்து பலரைக் கொன்றவர்களைக் குஜராத் பாஜக அரசு விடுவித்துள்ளது. கலவரத்தால் உறவினர்களையும் உடைமைகளையும் இழந்தவர்களை மோகன் பகவத் சந்திப்பாரா?” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
மோகன் பகவத்
நாட்டின் 5 இஸ்லாமியத் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கடந்த மாதம் சந்தித்து இருந்தனர். அப்போது நாட்டில் நிலவும் நிலைமை தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் சுமார் 75 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள மசூதி ஒன்றுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்று இருந்தார்.
டெல்லி மசூதி
மத்திய டெல்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள ஒரு மசூதிக்குச் சென்ற அவர், வடக்கு டெல்லியில் உள்ள ஆசாத்பூரில் உள்ள மதராஸாவும் சென்றார். மேலும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை மதகுரு உமர் அகமத் இலியாஸியையும் அவர் சந்தித்துப் பேசினார். மோகன் பகவத்தின் இந்த சந்திப்பைத் தான் ஓவைசி இப்போது குறிப்பிட்டு அட்டாக் செய்துள்ளார்.
மோகன் பகவத்
முன்னதாக ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சுவர்களில் அமைந்துள்ள இந்து தெய்விகங்களைத் தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்டில் சில பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில் அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒவ்வொரு மசூதியின் அடியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை” என்று கூறி இருந்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறுவதைப் பல இஸ்லாமியத் தலைவர்களும் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.