தமிழகம் முழுவதும் சிறைகளில் நன்னடத்தையை கடைப்பிடித்த 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அவர்களின் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என்றும், பாலியல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் தண்டனை பெற்று வருபவர்கள் விடுதலை செய்ய தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் நேற்று தமிழகத்தில் உள்ள 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள், அவர்களின் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பாக நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இதுவரை 96 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.