பரமத்தி வேலூ: ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களை ஏமாற்றி 7வது திருமணத்திற்கு முயன்ற கல்யாண ராணி சந்தியா வழக்கில் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய ஐயப்பனிடம் போலீசார் நடத்திய விசாரணை வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை மணமகள்களாக காட்டி 10க்கும் அதிகமான திருமணங்கள் நடத்தி மோசடி செய்ததாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெங்கரை அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(35). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா(26) என்பவருக்கும் புரோக்கர் பாலமுருகன் மூலம் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, 2 நாள் குடும்பம் நடத்திய நிலையில், 7ம் தேதி சந்தியா மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனபால், இது குறித்து பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்தபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் மற்றும் உறவினர்கள், அந்த நபர் மூலம் பொறி வைத்து கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, ஐயப்பன், கவுதம், டிரைவர் ஜெயவேல் ஆகிய 5 பேர் காரில் திருச்செங்கோடு வந்தபோது, அங்கு காத்திருந்த தனபால் மற்றும் உறவினர்கள் அவர்களை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உட்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், 7வது திருமணம் செய்ய வந்தபோது சிக்கியதும் அம்பலமானது.
விசாரணையின்போது, காவல்நிலையத்தில் இருந்து ஐயப்பன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பியோடி விட்டார். முன்னதாக அவரிடம் போலீசார் விசாரித்தபோது பதிவு செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இதுபோன்று பெண் தேடுபவர்களை குறி வைத்து திருமணங்கள் செய்து ஏமாற்றி வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை காட்டி 12க்கும் மேற்பட்ட திருமணம் நடத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த வாத்து வியாபாரி ஒருவரையும் திருமண மோசடி கும்பல் சந்தியா படத்தைக்காட்டி ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், மதுரை புரோக்கர்கள் மூலம் சந்தியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்காக புரோக்கர் கமிஷனாக ரூ.1.50 லட்சம் கொடுக்க முடிவானது. முன்பணமாக ரூ.30 ஆயிரம் வழங்கி விட்டு, மீதி தொகையை பின்னர் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வருங்கால வாழ்க்கை துணைவியான சந்தியாவிற்கு வாத்து வியாபாரி செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், ஒட்டுமொத்தமாக சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த திருமண மோசடி கும்பல் நாமக்கல், கரூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து குறிப்பிட்ட சமூகத்தினரை தங்களது வலையில் சிக்க வைத்துள்ளனர். இதன்மூலம் பல லட்சம் பணத்தை சுருட்டியது அம்பலமாகியுள்ளது. இந்த கும்பலை போலீசார் கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.