ரூ.950 வரை சென்ற எல்.ஐ.சி பங்கு இப்போது ரூ.650 என்கிற நிலையில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நீண்ட கால முதலீடாக எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்யலாமா என பார்ப்போம்.
ஒரு கம்பெனி பங்கின் விலை அக்கம்பெனியின் தற்போதைய வருவாய் மற்றும் எதிர்கால வருவாயைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விகிதம் P/E விகிதம் என்று அழைக்கப்படும்.
ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக இருப்பின், அந்நிறுவன பங்கின் P/E விகிதம் அதிகமாக இருக்கும். பட்டியலிடப்பட்ட 3 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான ஐசிஐசிஐ புரூடென்ஷியல், எஸ்பிஐ லைஃப் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவற்றிற்கான P/E 75-85 ஆக உள்ளது. (Sensexஇன் P/E 23 தான்). இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதே இதற்கு காரணம். இருப்பினும், இந்த அணுகுமுறை எல்.ஐ.சி.க்கு பொருந்தாது.
எல்.ஐ.சியின் தற்போதைய P/E 100 மடங்குக்கும் அதிகம். ஆனால் மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சியின் எதிர்கால வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. மேலே குறிப்பிடப்பட்ட 3 காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த அடித்தளத்தைக் கொண்டுள்ளன, எனவே அவை வேகமாக வளரக்கூடும். 2021-22 ஆம் ஆண்டிற்கான எல்.ஐ.சி பிரீமியம் இந்த 3 நிறுவனங்களின் மொத்த பிரீமியத்தை விட 3 மடங்கு அதிகமாக இருந்தது.
ஆனால் பிரீமியம் வருமான வளர்ச்சி மிகவும் குறைவு. உதாரணம், 2022 ஆம் நிதியாண்டில், எல்.ஐ.சியின் பிரீமியம் வருமான வளர்ச்சி 6.1%; ஆனால் எஸ்பிஐ லைஃப் இன் பிரீமியம் 17.4% வளர்ச்சியை அடைந்தது. இது எல்.ஐ.சி வளர்ச்சி விகிதத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். இக்கோணத்தில் பார்க்கும் போது எல்.ஐ.சி. பங்கின் P/E விகிதம் அதிகம். பங்கின் விலையும் அதிகம்.
எம்பெட்டட் மதிப்பு (Embedded Value or EV)
“எம்பெட்டட் மதிப்பு” (“EV”) என்பது ஆயுள் காப்பீட்டிற்கான மற்றொரு முக்கியமான அளவீடு. இது ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே விற்றுள்ள பாலிசிகளிலிருந்து எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தின் தற்போதைய மதிப்பு ஆகும். ஆயுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (Market Capitalisation) அதன் EV உடன் ஒப்பிடும் விகிதம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்விகிதம் பொதுவாக முதிய காப்பீட்டு நிறுவனங்களுக்கு குறைவாக இருக்கும் (அதிகம் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல்); அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட இளம் நிறுவனங்களுக்கு இவ்விகிதம் அதிகமாக இருக்கும்.
எல்.ஐ.சி.யைப் பொறுத்தவரை இவ்விகிதம் 0.77 மட்டுமே. ஆனால் எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின் விகிதம் 3.30. 31 மார்ச் 2022 உடன் முடிவடைந்த அரையாண்டில் எல்ஐசியின் EVயின் வளர்ச்சி 0.3% மட்டுமே; ஆனால் எஸ்பிஐ லைஃப் இன் வளர்ச்சியோ 12.3% ஆகும். எல்.ஐ.சி நீண்ட ஆண்டுகளாக செயல்படும் காரணத்தால் அதன் EV மிக அதிகம். ஆனால் EV இன் எதிர்கால வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.
சென்ற ஆண்டு எல்.ஐ.சி.யின் EV எஸ்பிஐ யின் EV யை விட 13.7 மடங்காக இருந்தது; ஆனால் எல்.ஐ.சியின் பிரீமியம் வருமானமோ எஸ்பிஐயை விட 7.3 மடங்கு மட்டுமே. ஏனெனில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வளர்ச்சி குறைவு. எனவே எல்.ஐ.சி. EV இன் எதிர்கால வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்பில்லை.
என்னவாகும் பங்கு விலை?
எல்.ஐ.சியின் எதிர்கால பிரீமியம் வருமானம், லாபம் மற்றும் EV தொடர்ந்து அதிக வளர்ச்சி அடையாவிட்டால், அதன் பங்கு விலை கணிசமாக உயர வாய்ப்பில்லை. மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி.க்கு அதிக வளர்ச்சி ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
எல்.ஐ.சி.யின் பங்குகளில் 3.5% மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த சதவிகிதம் எதிர்காலத்தில் சீராக உயரக்கூடும். அதிக பங்குகள் பங்குச் சந்தையில் புழக்கத்தில் வரும்போது விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.
எனவே, தற்போதைய விலையில் எல்.ஐ.சி. பங்கில் முதலீடு செய்வதை தவிர்த்தல் நலம்.
–எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com