ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த அணுகுமுறை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக்கறையை மறைக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.,வின் தடையை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை.
ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் எந்த பக்கம் இருக்கிறோம் என தொடர்ச்சியாக கேட்கின்றனர். எங்களது பதில், வெளிப்படையானது நேர்மையானது. இந்தியா அமைதியின் பக்கம் இருக்கும். அதில் உறுதியாக உள்ளோம். ஐ.நா.,வின் சட்டம் மற்றும் கொள்கைகளை மதிக்கும் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.
உணவு, எரிபொருள் மற்றும் உர விலையை உயர்வை பார்த்து அதிர்ச்சியுடன் பார்த்தாலும், வாழ்க்கையில் சந்திக்க போராடுபவர்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். ரஷ்யா உக்ரைன் மோதலுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது நமது கூட்டு நலனில் உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement