தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தல் விருவிருப்பாக நடந்துவருகிறது. அதேபோல உட்கட்சி விவகாரத்திலும் விருவிருப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பரபரப்பாக உட்கட்சித் தேர்தல் வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பார்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“பழையவர்களையே நியமிக்கச் சொல்லியும் தி.மு.க உட்கட்சித் தேர்தலுக்கு இவ்வளவு காலம் எடுத்தது ஏன்?”
“நியமிக்க அல்ல தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பழைய ஆட்களை ஒதுக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தலைமை அந்த உத்தரவைப் போட்டது. பொறுப்பில் இருக்கும் சிலர் தாங்களாகவே தொடர வேண்டாம் என நினைத்துச் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமனு தாக்கல் செய்தவர்களில் புகாருக்குள்ளானவர்களை நீக்கிவிட்டு புதிதாகச் சிலரை நியமித்தோம். அதற்கான நேரம் எடுக்கும்தானே.”
“இப்போதும் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர்மீது அறிவாலயத்தில் புகார்கள் குவிந்து கிடக்கின்றனவே?”
“இப்போது நடப்பது கட்சியின் 15-வது பொதுத்தேர்தல். இதற்கு முன் நடந்த தேர்தலில் இதைவிட அதிகப்படியான புகார்கள் பலர்மீதும் வைக்கப்பட்டன. அப்படி வந்த புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்களை மாற்றியிருக்கிறோம். இந்தத் தேர்தலின்போதுகூட சிலரைத் தலைமை மாற்றியிருக்கிறது. சில இடங்களில் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறோம்.”
“ஆனால், தலைமை இந்த விவகாரங்கள் எதிலும் தலையிடவில்லை எனக் கட்சித் தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்களே?”
“இது தவறான கருத்து. வேலைப் பளு காரணமாக அவரால் வர முடியவில்லை. ஆனால், அறிவாலயத்துக்கு வரும்போது யார் என்ன என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார். உட்கட்சித் தேர்தலில் எழும் பிரச்னைகளை மூத்த நிர்வாகிகள்தான் பேசி முடித்து வைப்பார்கள். அதற்கான குழு அனைத்துத் தேர்தலிலும் அமைக்கப்படும். அந்தக் குழுவால் தீர்க்கவே முடியாத பிரச்னைகளில்தான் தலைவர் கலைஞர் அழைத்துப் பேசி முடித்து வைப்பார். அதேபோலத்தான் தலைவர் ஸ்டாலினும் தீர்க்க முடியாத சில பிரச்னைகளைத் தீர்த்துவைத்தார்.”
“இவருக்குத்தான் மாவட்டப் பொறுப்பு எனச் சொல்லிவிட்டுத்தான் மா.செ தேர்தலே அறிவித்திருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?”
“அப்படியானால் விருப்பமனு என்ற ஒன்று ஏன் வழங்க வேண்டும். ஒரே நாளில் தேர்தலை நடத்தி அன்றே அறிவிப்பை வெளியிட்டுவிடலாமே. முறைப்படி விருப்பமனு கொடுத்து, அதை ஆய்வுசெய்து, அதில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களைத் தவிர்த்துவிட்டு பிறகுதான் தேர்தல் நடத்தவுள்ளோம். ஒன்றுக்கு மேற்பட்ட தேவை ஏற்பட்டால் தேர்தல் நடக்கும். அனைவரும் விருப்பமனு வாங்கலாம். கொடுத்திருக்கிறோம்.”
“தி.மு.க என்ன பேச வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பதுபோல இருக்கிறதே?”
“அவர்கள் அதிகமாக வர வரத்தான் தி.மு.க-வுக்கு நல்லது. அப்போதுதான் மனுதர்மம் என்றால் என்ன, இந்து மதம் எப்படியானது, ஆர்.எஸ்.எஸ் செய்த அட்டூழியங்கள் என்ன, காந்தியைக் கொன்றது யார் என்று தெரிந்துகொள்வார்கள். தி.மு.க-வுக்கும் சிறுபான்மை அமைப்புகளும் அது வளர்ச்சிக்கான ஆயுதம்.”
“தி.மு.க-வும் தாங்கள் இந்து மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை எனப் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறதா?”
“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை எதிர்கொண்டுதான் வெற்றி பெற வேண்டும். அவர்கள் செய்யும் பிரசாரத்தை எதிர்த்து திராவிடம் என்றால் என்ன அதன் பலம் என்ன என்பதை மீண்டும் உறக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் இளைஞர்களுக்கு திராவிட இயக்க வரலாற்றை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இப்போதுதான் பெரியார், அம்பேத்கரின் நூல்களை இளைஞர்கள் அதிகமாக வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க மற்றும் மதவாதிகளின் செயல்களால் இளம் சமூகத்துக்கு திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வைக்க முடிகிறது.”
“ஆளும் அரசுக்கு எதிராக நடந்த கடையடைப்புப் போராட்டத்தில் மிரட்டிப் பலரையும் பணிய வைத்திருக்கிறார்களே?”
“கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுபவர்களிடம் என்ன செய்ய முடியும். போராட்டத்தில் விருப்பம் இருப்பவர்கள் பங்கேற்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவருக்கும் போராட்டம் செய்ய உரிமை உண்டு. அதைத் தடுக்கும்போது வன்முறை வரும். அப்படி வன்முறை ஏற்பட வேண்டும் என்பதைத்தான் பா.ஜ.க-வினர் எதிர்பார்க்கிறார்கள். சில இடங்களில் கைதுசெய்து வைத்திருக்கிறோம். அவர்களை சிறைக்கு அனுப்புவதால் சோத்துக்குத்தான் அரசு வீண் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் மாலையில் விட்டுவிடுகிறோம்.”
“கூட்டணிக் கட்சிகளை கருத்துச் சொல்லவிடாமல் அடக்குகிறதா தி.மு.க?”
“அவர்கள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கிறோம். தலைவரும் அதையேதான் சொல்லியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளை எப்போதும் மிரட்டுவதில்லை. அவர்களிடம் வேண்டுகோள்தான் வைக்கிறோம்.”