மதுரை: தமிழகத்தில் இந்து அமைப்பினர் வீடுகளில் பாட்டில் குண்டு வீசப்பட்ட நிலையில், ”பாஜகவினர் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என கட்சி மேலிட நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செப். 22-ல் சோதனை நடத்தி 11 பேரை கைது செய்தனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீசியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோவை, சென்னை, திருச்சி, விழுப்புரம், வேலூர், சேலம், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் பாட்டில் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவங்களால் இந்து அமைப்புகளின் அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களை குறி வைத்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசியவர்களை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பாட்டில் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், பாதிப்பை கண்டறியவும் பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, வானதி சீனிவாசன் தலைமையில் 4 குழுக்களை அமைத்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணை, எம்எல்ஏக்கள் குழு விசாரணை என பரபரப்பான சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாஜக மாவட்ட நிர்வாகிகள் வாட்ஸ்அப் குழு மூலம் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை குரல் பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.
அந்த குரல் பதில், ”இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. பாஜகவினர், இந்து அமைப்பினர் வீடுகளின் மீது பாட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் கட்சியினர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்சி அலுவலகம் செல்வதாக இருந்தாலும், வெளியே செல்வதாக இருந்தாலும் மிகுந்த பாதுகாப்புடன் நடமாட வேண்டும். துணையில்லாமல் வெளியே எங்கும் செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள். இதை தங்களுக்கு தெரிந்த கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து வந்துள்ள எச்சரிக்கை தகவலையடுத்து பாஜகவினர் கவனமாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.