யானைகள் வழித்தடமாக இருக்கும் பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி மதிப்பில் தடுப்பணை விரிவாக்கப் பணிகள் குறித்த ஆந்திர முதல்வரின் அறிவிப்புக்கு தமிழக அரசு விரைவாக எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா, தமிழகத்தில் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. ஏற்கெனவே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 27 இடங்களில் ரகசியமாக தடுப்பணைகளை கட்டியதுடன் ஏற்கெனவே இருந்த தடுப்பணைகளின் உயரத் தையும் அதிகரித்தது.
குப்பம் தொகுதிக்காக பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்பவும், தடுப்பணைகளில் 7 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், கிடப்பில் உள்ள பாலாறு தடுப்பணை திட்டத்தை விரிவுபடுத்த அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழக விவசாயிகள், பாலாறு ஆர் வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பம் தொகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் பேசும்போது, ‘‘ஹந்திரி நீவா குடிநீர் திட்டப் பணிகள் 6 மாதத்துக்குள் பூர்த்தி செய்யப்படும்.
யாமிகானி பல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணைகள் கட்டப்படும். குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்க பணிகள் நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திர அரசின் நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை தாண்டி தமிழக பாலாற்றுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது என்பதால் தமிழக அரசு விரைவாக எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆந்திர மாநில முதல்வரின் அறிவிப்பை ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத் துள்ளனர்.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘குப்பம் தொகுதியில் ஆந்திர முதல் வரின் புதிய அறிவிப்பு வன்மையாக கண்டனத்துக்குரியது. அவரின் பேச்சு 1892-ம் ஆண்டு பன் மாநில நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது.
குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானைகள் வழித்தடமாகும். கர்நாடக மாநிலம் பன்னாரகட்டாவில் இருந்து ஓசூர் சாமபள்ளம், குப்பம், கணேசபுரம் வழியாக திருப்பதி வரை யானைகள் செல்லும் வழித் தடமாகும். இந்த பகுதியில் சமீபத்தில்கூட 26 யானைகள் கூட்டமாக முகாமிட்டு சுற்றி வருகின்றன.
இந்த பகுதியில் எந்தவிதமான மாற்றங்களையும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது. ஆனால், அதையும் மீறி புதிய திட்டங்கள் ஆந்திர முதல்வர் மேற்கொள்ளக்கூடாது. யானைகள் வழித்தடமான கணேசபுரத்தில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் தடையாணை வழங்கியுள்ளது.
கணேசபுரம் முதல் புல்லூர் வரை யானைகள் வழித்தடமாகும். அதனால், அந்த பகுதியில் புதிய திட்டம் செயல்படுத்துவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஹந்திரி நீவா திட்டத்தை வரவேற்கிறோம்.
ஆனால், பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதையோ அல்லது இருக்கின்ற தடுப் பணைகளின் உயரத்தை அதி கரிப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இது எங்கள் வாழ்வாதார பிரச்சினை. பாலாற்றில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கூடுதல் நீரை தேக்கி வைக்கும் முடிவையும் கண்டிக் கிறோம்’’ என்றார்.
இதுகுறித்து, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இரு மாநில அரசுகளுக்கு இடையில் நல்லுறவு இருந்தாலும் தமிழ்நாடு அரசு எந்த நேரத்திலும் தனது மாநில உரிமையை விட்டுக்கொடுத்ததில்லை. ஆந்திர அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு நிச்சயம் எதிர் நடவடிக்கை எடுக்கும்.
தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டுவது நல்ல விஷயம் என்றாலும், அடுத்த மாநிலத்துக்கு தண்ணீரை கொடுக்காமல் தடுப்பது ஓரவஞ்சணையான செயல். இதற்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகாது. தமிழக முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும் நிச்சயம் பதில் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றார்.