“பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ சமீபத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகள்மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோவை, ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
நேற்று இரவு மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனுப்பானடியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் சிசிடிவி காட்சிகளை வைத்து மாநகர காவல்துறை சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தென் மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசுபவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டும், வாகன ரோந்தும் நடந்து வருகிறது. முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ராமநாதபுரம் சம்பவங்களில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். அதுபோல் கன்னியாகுமரியில் நடந்த சம்பவத்தையும் விசாரித்து வருகிறோம். சட்ட விரோதமாக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் கொடுக்கக் கூடாதென்று எச்சரித்துள்ளோம். இந்தச் சம்பவங்களுக்கு பின்னணியில் புதிய அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். அதே சமயம், தாங்களாகவே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு நாடகமாடுபவர்கள்மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.