மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும்

சித்தரிப்புப் படம்

Getty Images

சித்தரிப்புப் படம்

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக சேலம் மாநகர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில், ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சிசிடி கேமரா பதிவின்படி காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதாக போலிசாருக்குத் தெரியவந்தது.

இதை தொடர்ந்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் 34 வது கோட்ட கிளை எஸ்டிபிஐ தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமாவளவன் எழுப்பிய சந்தேகம்

அஸ்ரா கார்க்

BBC

அஸ்ரா கார்க்

திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம் போன்ற இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு பிறர் வீசியதாக கூறிய நிகழ்வுகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இருக்க வாய்ப்புண்டு என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சீமான் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள அந்த அறிக்கையில் தென் மாநிலங்களே தமது இலக்கென பாஜகவின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ்நாட்டில் மதமோதல், கும்பல் வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயம் வலுப்பதாக கூறியிருக்கும் சீமான் “ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையை நினைவூட்டுகின்றன. தாங்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் வாகனத்தை எரித்து அரசியல் லாபம் பெற முயன்ற பாஜக நிர்வாகிகளின் முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் என்னும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை…” என்றும் கூறியிருக்கிறார்.

https://twitter.com/SeemanOfficial/status/1573913779351719937?s=20&t=7m8NqKy934Nb3rqSk2Ck1Q

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் பற்றி குறிப்பிட்ட சீமான், உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை வைக்கத் தவறியதன் விளைவாகவே அந்த ஊர்வலங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

இந்நிலையில் விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக் வீசிக்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளரிடம் பேசுமையில்,

“திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டியைசேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாநகரத் தலைவர் செந்தில் பால்ராஜ் செட்டில் இருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்த வழக்கில் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில், சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.



தற்போதைய சூழலில் விசாரணை என்பது முழு முன்னேற்றத்தில் சீராக சென்று கொண்டிருக்கிறது.

முக்கியமான இடங்களில் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சில்லறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களும் காவல்துறையின் அறிவுறுத்தலை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் யாரெல்லாம் முக்கிய நபர்கள் குறித்து முழு விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வீடு, அலுவலகம் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

‘முதல்வர் விழித்து கொள்ள வேண்டும்’

அண்ணாமலை

BBC

அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், “மத்திய அரசு அமலாக்கத் துறை, மாநில காவல் துறை இணைந்து செய்த சோதனைக்கு பாஜக தொண்டன் என்ன செய்வான்? பாஜக தொண்டரின் வீடு உட்பட 25 இடங்களுக்கு மேல் குண்டு போட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனை பேரை கைது செய்துள்ளது. தமிழக முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும்.

கோவை மாவட்ட காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை. இது திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடக்கின்ற போர். காவல்துறை அதிகாரிகள் இதில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். பாஜக தொண்டர்களிடம் அத்துமீறிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நானே புகார் அளிப்பேன்.” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.