மதுரை: மதுரையில் மகத்தான உயிர் காக்கும் மருத்துவ சேவையை தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறது. இச்சேவையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஆபத்து காலத்தில் கிடைக்கின்ற உதவி போன்று உன்னதமானது உலகில் வேறொன்று இருக்க முடியாது. இதில் உயிர் காக்கும் உதவி மேலும் மகத்தானது.
இவ்வகையில் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி துவக்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் திட்டம், இதுவரை பல லட்சம் உயிர்களை காக்கும், உயர்ந்த சேவையாற்றி வருகிறது. 2008ல் அண்ணா பிறந்த தினமான செப்.15ல் சென்னையில் துவக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை, அதே 2008 நவம்பரில் சென்னைக்கு அடுத்ததாக, மதுரை மாவட்டத்தில் தனது சேவையை துவக்கியது. 12 ஆம்புலன்சுகளுடன் துவங்கிய இச்சேவை மாவட்டத்தில் தற்போது 42 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு தாய்- சேய் நல ஆம்புலன்ஸ், இரண்டு பைக் ஆம்புலன்ஸ் சேர்த்து மொத்தமாக 46 ஆம்புலன்களுடன் விரிந்திருக்கிறது.
காவல்துறை அழைப்புக்கு 100, தீ விபத்துக்கு 101 என்ற வரிசையில் தற்போது மக்களின் ஆபத்பாந்தவனாக மருத்துவ சேவையில் முன்னால் முகம் காட்டி நிற்கிறது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை. எப்போது அழைத்தாலும் சில நிமிடங்களில் நோயாளி, பாதித்தவரின் வீடு, விபத்து நடந்த இடம் என தேடி வந்து உயிர் காக்கும் மக்கள் சேவையில் 108ன் பங்கு மகத்தானது.
108 ஆம்புலன்சை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைத்தாலே போதும், சென்னையில் உள்ள ‘கால் சென்டருக்கு’ அழைப்பு சென்று, அங்கிருந்து அந்தந்த மாவட்ட, ஏரியா பகுதிகளுக்கு ‘ஜிபிஎஸ்’ வசதியில் வாகனம் அருகாமையில் இருப்பதை கண்டறிந்து தகவல் தெரிவித்து விரைந்து அனுப்பி வைப்பர்.
நோயாளி அல்லது விபத்து நடந்த இடத்திற்கு 15 நிமிடங்களில் வாகனம் வந்து சேரும். மக்களுக்கான சிறந்த சேவை அளிக்கும் வகையில், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அரசு அளித்து வருகிறது. இது அவர்கள், அவசர காலங்களில் செயல்படுவதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி கொள்ள உதவுகிறது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் 46 ஆம்புலன்சுகள் மூலம் 92 ஓட்டுநர்கள் மற்றும் 91 மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 183 பேர், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்த 2022ம் ஆண்டின் ஜனவரி துவங்கி இதுவரையிலும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, உயிர் காக்கப்பட்டவர்கள் விபரம்:
ஜனவரியில் 884 பேர், பிப்ரவரி 897 பேர், மார்ச் 1,142 பேர், ஏப்ரல் 1,011 பேர், மே 1,143 பேர், ஜூன் 1,108 பேர், ஜூலை 1,054 பேர், ஆகஸ்ட் 1,249 பேர் என மொத்தம் 8,488 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர், இந்த செப்டம்பர் இதுவரையிலும் இந்த எண்ணிக்கை மேலும் ஆயிரத்தை கடந்திருக்கிறது. தாய்- சேய் நல சிகிச்சை, பிரசவம் உள்ளிட்டவைகளில் ஜனவரி 1,258 பேர், பிப்ரவரி 1204 பேர், மார்ச் 1409 பேர், ஏப்ரல் 1,238 பேர், மே 1,418 பேர், ஜூன் 1,463 பேர், ஜூலை 1,549 பேர், ஆகஸ்ட் 1,500 பேர் என மொத்தம் 11,039 பேர் பயனடைந்து உள்ளனர். இந்த செப்டம்பரில் இதுவரையிலும் ஆயிரம் எண்ணிக்கை கடந்திருக்கிறது.
வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், நாய் உள்ளிட்ட விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் என ஜனவரியில் 3,261 பேர், பிப்ரவரி 2,574 பேர், மார்ச் 2,577 பேர், ஏப்ரல் 2,462 பேர், மே 2,414 பேர், ஜூன் 2,337 பேர், ஜூலை 2,493 பேர், ஆகஸ்ட் 2,570 பேர் என மொத்தம் 20,688 நபர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த செப்டம்பர் இதுவரையிலும் மேலும் ஆயிரம் பேர் வரை எண்ணிக்கை எகிறி நிற்கிறது. இம்மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சேவையை பெற்று உயிர் பிழைத்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் 188 ஆம்புலன்ஸ்களை தமிழகத்திற்காக வழங்கி துவக்கி வைத்தார். மேலும் 75 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த வாகனங்களில் சில மதுரைக்கும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணிக்கை மேலும் அதிகரித்து, கூடுதல் சேவையை மக்கள் பெற முடியும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தந்த சேவை மகத்தானது. கிராமப்புறங்களில் பாம்பு கடிப்பது துவங்கி, நகர்ப்புறத்து விபத்து வரையிலும் எத்தனையோ அவசர காலத்து உதவிகள் கிடைக்கிறது. அரசின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றாக இந்த 108 சேவை இருக்கிறது’ என்றார்.
மனநிறைவு அளிக்கிறது
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளரும், வாகன டிரைவருமான எம்.இருளாண்டி கூறும்போது, ‘கலைஞர் துவக்கி வைத்து, இன்று சேவைகளால் மக்கள் இதயத்தை இந்த 108 ஆம்புலன்ஸ் கொள்ளை கொண்டுள்ளது. பிரசவ வலியில் துடிக்கும் தாய்மார்களை, பச்சிளம் குழந்தைகளை, முதியோரை, விபத்தில் சிக்கி தவிப்போரை என பலதரப்பட்டவர்களையும் மீட்டு உயிர் காக்கும் 108 ஆம்புலன்சில் பணிபுரிவது எங்களை போன்றோருக்கு மனநிறைவளிக்கிறது.
ஒரு கிமீட்டரை குறைந்தது ஒரு நிமிடம் என கடந்து, மருத்துவமனையில் விரைந்து சேர்த்து உயிர் காக்கப்படுகிறது. ‘கோல்டன் அவர்ஸ்’ எனும் சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து, உயிர் காக்கும் இப்பணி மகத்தானது. 108 ஆம்புலன்சுக்குள் உயிர்காக்கும் அனைத்து வகை மருந்துகளும் இருக்கிறது. நோயாளியை, பாதித்தவரை வாகனத்தில் ஏற்றியதும் சென்னையில் உள்ள மைய அலுவலகத்தின் 24 மணிநேர டாக்டரை தொடர்பு கொண்டு உரிய மருந்து உள்ளிட்டவைகளை கேட்டு தெரிந்து, அடுத்த நிமிடமே சிகிச்சை துவக்கி விடுவோம்.
தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் உயிர்காக்கும் இந்த 108 மருத்துவ சேவை மீது கூடுதல் அக்கறை காட்டி வருகின்றனர். அதிகபட்சம் 2 கிமீட்டருக்குள் ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை இப்போது இருக்கிறது’ என்றார்.