திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில், “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்..?. எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்..?” என பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்துக்களை அவமரியாதையாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
அதற்கு போட்டியாக, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம், புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாகவும் அதனை கண்டித்து பெரியாரிய இயக்கங்கள் நாளை (செப்.26-ம் தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களின் ஏட்டிக்கு போட்டியான இந்த அறிவிப்புகளால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் 2 நாட்கள் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.