திருமலை: திருப்பதி அருகே ரேணிகுண்டா மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையை டாக்டர் தம்பதி ரவிசங்கர் (44), அனந்தலட்சுமி (40) ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் சித்தாரெட்டி (11), மகள் கார்த்திகா (6). இவர்கள் மருத்துவமனையின் மேல் தளத்தில் வசிக்கின்றனர். கீழ்தளத்தில் 5 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளது. மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்றிரவு வழக்கம்போல் தம்பதியினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மேல்மாடியில் உள்ள தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இன்று அதிகாலை வீட்டில் இருந்து திடீரென புகை வந்ததால் வாக்கிங் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியினர் வருவதற்குள் தரைத்தளத்தில் உள்ள மருத்துவமனைக்கும் தீ பரவி மின்வயர்கள் எரிந்து வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள், அவசர, அவசரமாக வெளியே வந்துவிட்டதால் உயிர் தப்பினர். ஆனால் மேல்மாடியில் டாக்டர் வீட்டில் இருந்து உடனடியாக யாரும் வெளியேற முடியவில்லை.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரேணிகுண்டா தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பின்னர் ஜேசிபி மூலம் மருத்துவமனை கட்டிடத்தின் ஒரு பகுதி இடித்து தீயணைப்பு வீரர்கள் முதல் மாடிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் சிறுவன் சித்தாரெட்டி, சிறுமி கார்த்திகா ஆகியோர் இறந்துகிடந்தனர். மற்றொரு அறையில் டாக்டர் ரவிசங்கர் தம்பதி மற்றும் உறவினர் ராமசுப்பம்மா (65) ஆகியோர் சிக்கி உயிருக்கு போராடினர். அ பலத்த தீக்காயம் அடைந்த ரவிசங்கரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே ரவிசங்கர் பரிதாபமாக இறந்தார். டாக்டர் அனந்தலட்சுமி, மூதாட்டி ராமசுப்பம்மா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக ரேணிகுண்டா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ‘’ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளது’’ தெரியவந்துள்ளது.