காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றி பாப்பாங்குளம், திருப்புலிவனம், மானாமதி, ரெட்டமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல திருப்புலிவனத்திலும், செங்கல்பட்டு சாலையில் உள்ள பருத்திக்கொள்ளை என்னும் இடத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கு உத்திரமேரூரில் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர்.
இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பேருந்து வசதிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, இருக்கும் பேருந்துகளில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பேருந்து இயக்குவதற்கு அஞ்சுகின்றனர் போக்குவரத்து தொழிலாளர்கள். மாணவர்கள் பேருந்தில் இடம் இருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி கொண்டும், மேற்கூரையில் ஏரியும் பேருந்தை அடித்தும் செய்யும் அட்டகாசத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாணவர் ஒருவர் ஓடும் பேருந்தைப் பிடித்துக்கொண்டு தரையில் காலை வைத்து சாலையில் தேய்த்து செல்லும் சாகச வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த மாணவர் யார்? எந்த ஊரில் உள்ள பள்ளி என்று கண்டுபிடித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஏற்கனவே சாகசங்கள் செய்தும் படியில் தொங்கியும் உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இருக்கும் நிலையில் அதைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளி கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.