மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்: நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதி விஸ்வக்சேனர் மாடவீதி உலா நாளை நடக்கிறது. அன்று ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (27ம் தேதி) பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான நாளை மறுநாள் மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை மறுதினம் இரவு பெரிய சேஷவாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 2ம் நாள் (28ம் தேதி) காலை சின்ன சேஷ வாகனத்திலும் அன்றிரவு அன்ன வாகனத்திலும் ஏழுமலையான் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

3ம் நாள் (29ம் தேதி) காலை சிம்ம வாகன உற்சவம், அன்றிரவு முத்துப்பல்லக்கில் தேவி, பூதேவியருடன் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. 4ம் நாள் (30ம் தேதி) காலை கற்பக விருட்ச வாகனத்திலும், அன்றிரவு சர்வ பூபால வாகனத்திலும்,  5ம் நாள் (அக்.1ம் தேதி) காலை நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்திலும், கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் வலம் வருகின்றனர். மோகினி அலங்காரத்தின்போது தமிழகத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மாலை மற்றும் பட்டுப்புடவை மோகினி அலங்காரத்தில் உள்ள சுவாமிக்கு அணிவிக்கப்படும். அன்றிரவு கருட சேவை உற்சவம் நடக்கிறது. அப்போது மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டி ஆரம் ஆகியவை அணிவிக்கப்படும். 6ம் நாள்(2ம் தேதி) காலை அனுமந்த வாகனத்திலும், அன்று மாலை தங்கத்தேரில் தேவி, பூதேவி தாயார்களுடன் ஏழுமலையான் வரும் வருகிறார். அன்றிரவு யானை வாகன உற்சவம் நடக்கிறது.

7ம் நாள்(3ம் தேதி) காலை சூரிய பிரபை வாகனத்திலும், அன்றிரவு சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெறும். 8ம் நாள்(4ம் தேதி) காலை மகா தேரோட்டம் நடைபெறும். அன்றிரவு அஸ்வ வாகனத்திலும் கல்கி அவதாரத்திலும் ஏழுமலையானை வலம் வந்து அருள்பாலிக்கிறார். 9ம் நாள்(5ம் தேதி) மற்றும் நிறைவு நாளான அன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். நாளை மறுநாள் தொடங்க உள்ளதால் கோயில் கோபுரங்கள், சுற்றுப்புற பகுதிகள், மாடவீதிகளில் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.