டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதை `இரவின் நிழல்’ வென்றுள்ள உற்சாகத்தில் இருக்கிறார் பிரிகிடா சகா. வாழ்த்துகளுடன் அடுத்தடுத்தப் படங்கள் குறித்து பேசினோம்,
“எனது முதல் படமே நாமினேஷனுக்கான பரிந்துரை வரை சென்று வந்தது பெரும் சந்தோஷம். நான் எங்க… ஆஸ்கர் எங்க? அதனால், எனக்கு இதெல்லாம் பெரிய விஷயம். இரவின் நிழல் படம் ஆஸ்கருக்குச் செல்லும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், செல்லவில்லை. அது கொஞ்சம் கஷ்டம்தான். தற்போது, தெலுங்கில் ‘செந்தூரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளேன். இதுதான், எனது முதல் தெலுங்கு படம். அதுவும், தெலுங்கு தெரியாமல் போய் தைரியத்துடன் நடித்தேன். மொழி தெரியாமல் நடித்தாலும் அங்கிருப்பவர்கள் நடிப்புக்காக என்னைப் பாராட்டுகிறார்கள். தர்மா ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெயரிடப்படாத இன்னொரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன். தமிழில் நடிக்கத்தான் ஆசை. தமிழிலும் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தெலுங்கில் வருவதையும் தவிர்க்க முடியாதல்லவா?”.
‘இரவின் நிழல்’ படத்திற்காக கிடைத்த எதிர்பாராத பாராட்டு?
“ரஜினி சாரின் பாராட்டுதான். ‘இரவின் நிழல்’ படத்தை ரஜினி சார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். படத்தைப் பாராட்டிய ரஜினி சார் ‘தெலுங்கு போர்ஷனில் நடித்தப் பொண்ணு ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க’ன்னு பார்த்திபன் சாரிடம் பாரட்டியுள்ளார். சார் இதைச் சொன்னப்போ, என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய ஆசிர்வாதமாக உணர்ந்தேன். அதேபோல, ஏ.ஆர் ரஹ்மான் சாரும் `பெரிய ஆர்டிஸ்டா வருவீங்க’ன்னு பாராட்டினார்”.