பேட்டை: பேட்டை – சேரன்மகாதேவி சாலையில் அபாயகரமான இடங்களில் சாலை விபத்து ஏற்படாமல் தவிர்த்திட வேகத்தடைகள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. நெல்லையை அடுத்த பேட்டை – சேரன்மாதேவி சாலை வழியாக முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர், அம்பை, பாப்பாக்குடி, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அங்கிருந்து நெல்லைக்கும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தினந்தோறும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பேட்டை – சேரன்மகாதேவி சாலையில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்திட வேண்டி பேட்டை பொது நலச்சங்க தலைவர் அயூப்கான் என்பவர் சட்டப்பணிகள் குழுவில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த அமைப்பானது ரொட்டிக்கடை ஸ்டாப், கீப்லெப்ட் ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்துக் கொடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பேட்டை ரொட்டிக்கடை மற்றும் கீப் லெப்ட் ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்திடும் வேளையில் பேட்டை முனிசிபாலிட்டி ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே இயங்கி வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நலன் கருதியும், இதேபோல் சுத்தமல்லி பெரியார் நகரை அடுத்த கொம்பு மாடசாமி கோயில் பத்திரப்பதிவு அலுவலக பகுதி, கொண்டாநகரம் விலக்கு ஆகிய பகுதிகளில் தொடர் விபத்து சம்பவங்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுத்திட அப்பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.