நெல்லைக்கு வந்த மூத்த அமைச்சர் ஒருவர், கல்குவாரிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது குறித்து எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார். அது குறித்துக் கேட்டதற்கு, “இது தொடர்பாக குவாரி உரிமையாளர்கள் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை” என்று வெளிப்படையாகவே சொன்னாராம். அதனால் குவாரி உரிமையாளர்கள் சிலர் ஸ்வீட் பாக்ஸுகளுடன் அவரை நேரில் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். அதைச் சட்டை செய்யாத அவரோ, “குவாரியிலிருந்து எவ்வளவு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எல்லா குவாரி உரிமையாளர்களிடமும் பேசி நல்ல முடிவோடு வாருங்கள்” என்று அனுப்பிவைத்துவிட்டாராம். அதனால் அனைத்து குவாரி உரிமையாளர்களும் சேர்ந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் தயார் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம். அமைச்சர் காட்டில் ஸ்வீட் மழை கொட்டப்போகிறது!
பட்டாசு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிகத்தலத்திலுள்ள 57 காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. நிரந்தரப் பணி என்பதால் பலரும் அந்த வேலைவாய்ப்பைப் பெற முயன்றுவருகிறார்கள். ஆனால், ஆட்களைத் தேர்வுசெய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் அல்ல… மூத்த இனிஷியல் அமைச்சர் தரப்புதான் கவனிக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் ஐந்து லட்டு தருவோருக்கு ஒரு துண்டு என்று திரைக்குப் பின்னால் டீலிங் நடப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. ஆட்களைப் பொறுத்து இந்த லட்டுகளின் எண்ணிக்கையை ஏற்றவும் இறக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
என்னவென்று விசாரித்தால், சமீபத்தில் கட்சி நிகழ்ச்சிக்காக அள்ளிவிட்டத்தைப் பிடிக்கத்தான் அமைச்சருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கிசுகிசுக்கின்றனர் உடன்பிறப்புகள்.
அமைச்சர் பி.டி.ஆரையே மாநகரம் முழுக்க கவனித்துக்கொள்ள தலைமை அனுமதித்திருப்பதால், அவர் சிபாரிசு செய்யும் நபரே அடுத்த மாநகர தி.மு.க செயலாளராக வருவார் என்கிறார்கள் மதுரையில். ஏற்கெனவே மாநகரச் செயலாளர்களாக இருந்த பொன்.முத்துராமலிங்கமும், கோ.தளபதியும் மீண்டும் மாநகரச் செயலாளராவதற்கு முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடன் வேலுச்சாமி, மா.ஜெயராமன், பொன்.சேது, எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட சிலரும் முயல்கிறார்கள். இந்தச் சூழலில் பி.டி.ஆரின் சிபாரிசில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநில மாணவரணி நிர்வாகி அதலை செந்தில்குமார் ஆகியோரில் ஒருவருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்கலாம் என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.
நீலகிரியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு எதிராகக் கடையை அடைக்கச் சொல்லி வியாபாரிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்திருக்கிறது பா.ஜ.க. இன்னொருபுறம், “நகராட்சிக்குக் கடை வாடகை பாக்கியைச் செலுத்தத் துப்பில்லை… பா.ஜ.க பேச்சைக் கேட்டு ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடையடைப்பு நடத்துவீர்களா?” என்ற தொனியில் ஊட்டி நகர் மன்றத்தின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வியாபாரிகளுக்கு எதிராக அதிகாரிகளை ஏவிவிட்டிருக்கிறார்களாம்.
கடுப்பான வணிகர்கள், மார்கெட் வளாகத்துக்குள் உணவு சமைத்துச் சாப்பிட்டு இரவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். `பா.ஜ.க – தி.மு.க மோதலில் நாம் தேவையில்லாமல் மூக்கை நுழைத்திருக்க வேண்டாம்’ என்று நிர்வாகிகள் சிலர் இப்போது பேசுகிறார்களாம்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்ற பிறகு, துணை முதல்வராக இருக்கும் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர்போலச் செயல்பட்டுவருகிறார். அமைச்சரவையும் முழுமையாக விரிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் ஷிண்டேயை நம்பி அவருடன் வந்த சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்த முடியாமல் ஷிண்டே திணறிவருகிறார். இன்னொரு பக்கம், சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செப்டம்பர் 27-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்க விவகாரத்தில் தங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் முடிவுசெய்யும் பட்சத்தில் என்ன செய்யலாம் என்பதே முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கவலை. எனவே, இரவோடு இரவாக டெல்லிக்குச் சென்ற அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது நாளும் ஷிண்டே டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற எடப்பாடிக்குக் கிடைத்த அதே ரெஸ்பான்ஸ்தான் ஷிண்டேவுக்கும் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.
அ.தி.மு.க சார்பில் பேட்டி என்றாலே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் முகம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர்களைச் சந்தித்துவந்த அவரை கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது தலைமை.
ராஜ்ய சபா எம்.பி., அவைத்தலைவர் என எந்த முக்கியப் பொறுப்பும் கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஜெயக்குமாருக்கு, அதையெல்லாம்விட பேட்டி கொடுக்கக் கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டதுதான் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தனக்கு நெருக்கமானவர்களிடமெல்லாம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார் அவர்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சமீபத்தில் சொன்ன கருத்துக்கு எதிராக ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, சென்னை கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் உக்கிரமாக எதிர்வினையாற்றிவருகிறார்கள்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, ‘மனுஸ்மிருதியில் இருக்கும் ஒரு கருத்தைத்தானே சொல்லியிருக்கிறார்…’ என்று அடக்கி வாசிக்கிறார்களாம். முதலில் உக்கிரம்காட்டிய அண்ணாமலையும்கூட, `இதைப் பெரிதாக்கத்தான் வேண்டுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். ‘பா.ஜ.க இந்துக்களையே இரண்டாகப் பிரித்துவிட்டார் ஆ.ராசா’ என்கிறார்கள் அந்தக் கட்சியில் சிலர்!