தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் முதிர்வயது பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.
மாஷா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் பெண்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் தெஹ்ரானில் நாள்தோறும் இரவில் பெண்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக நேற்று இரவும் போராட்டம் நீடித்தது. இரவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனினும் எதற்கும் அஞ்சாமல் சாலை, தெருக்களில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் 80 நகரங்களுக்கு போராட்டம் பரவி உள்ளது. அந்த நகரங்களில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். பலர் காயமடைந்துள்ளனர். போலீஸ் தரப்பிலும் சிலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போராட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஹிஜாப் விவகாரத்தால் உயிரிழந்த மாஷா அமினி, குர்து இன பெண் ஆவார். அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெர்சிய இன மக்களுக்கு அடுத்து குர்து இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதுவும் போராட்டம் வலுவடைய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளிலும் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் ஈரான் தூதரகங்களுக்கு முன்பாக பெண்கள் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தக்கூடாது என்று ஈரான் அரசுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கு எதிராக திரும்பிய பொதுமக்கள்
கடந்த 1978-79-ம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட புரட்சியால் மன்னராட்சி அகற்றப்பட்டது. அதன்பிறகு முஸ்லிம் சட்ட விதிகள், நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஆதரவு அளித்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் ஈரானில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 55 சதவீத மக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்காவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலானோர் ஆதரவு நல்கினர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் திரும்பி வருகின்றனர். குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு திறம்பட செயல்படவில்லை. உக்ரைன் போரால் ஏற்பட்ட விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதோடு பெண்களின் ஆடை விவகாரத்தில் ஈரான் அரசும் அந்த நாட்டின் மதத் தலைவர் அலி கொமேனியும் வரம்பு மீறி செயல்படுவதாக இளைய தலைமுறையினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த பின்னணியில் தற்போதைய ஹிஜாப் விவகாரத்தால் ஈரான் பற்றி எரிகிறது.