★★★★★ – இது இந்தப் படத்துக்கான ஸ்டார் ரேட்டிங் அல்ல. இது குறித்து கடைசியில் பார்ப்போம்.
“இதுக்குப் போய் கொல்வீங்களா?” என்ற ‘அந்நியன்’ படத்தின் வசனத்தை சீரியஸாகவே எடுத்துக்கொண்டு சினிமா விமர்சனம் செய்பவர்களை ஒரு சீரியல் கில்லர் வரிசையாகப் போட்டுத் தள்ளினால் எப்படியிருக்கும் என்ற ரணகள ஐடியாதான் இந்த ‘Chup: Revenge of the Artist’.
மும்பை க்ரைம் பிராஞ்ச் அதிகாரியான அர்விந்த் மாதுரிடம் ஒரு கேஸ் வருகிறது. புகழ்பெற்ற சினிமா விமர்சகரான ஒருவர், தன் வீட்டுக் கழிவறையில் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு, உடலெங்கும் வெட்டப்பட்டு, நெற்றியில் விநோதமான முத்திரையுடன் இறந்து கிடக்கிறார். அந்த விநோதமான முத்திரை படங்களுக்குக் கொடுக்கப்படும் ஸ்டார் ரேட்டிங் என்பது பின்னர் தெரியவருகிறது. அடுத்தடுத்து கொடூரமான முறையில் மேலும் சில சினிமா விமர்சகர்ளும் ஸ்டார் ரேட்டிங் போட்டு கொல்லப்படுகிறார்கள்.
அதே சமயம், பூக்கள் விற்கும் ஃப்ளவர் ஷாப் வைத்திருக்கும் டேனிக்கு நிலா மேனன் என்ற சினிமா ரிப்போர்ட்டரின் நட்பு கிடைக்கிறது. அது பின்னர் காதலாக மாறுகிறது. அவ்வப்போது தனக்குத் தானே பேசிக்கொள்ளும் டேனி, தன் வீட்டினுள்ளும், மனதினுள்ளும் வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன, சீரியல் கில்லரை அர்விந்த மாதுர் நெருங்கினாரா, அவர் எடுக்கும் விபரீத முயற்சி என்னவானது என்பதுதான் படத்தின் கதை.
டேனி என்னும் செபாஸ்டியன் கோம்ஸாக துல்கர் சல்மான். இந்த வருடம் ‘சீதா ராமம்’, இப்போது ‘சுப்’ என தன் கரியரின் சிறந்த இடத்தில் இருக்கிறார் எனலாம். தனக்குள்ளே பேசிக்கொண்டு மிரளச் செய்வது, காதலில் கசிந்துருகுவது, இன்னொரு முகம் வெளிப்பட்டதும் இன்னும் மிரளச் செய்வது என நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கும் சிறப்பானதொரு பாத்திரம். குறைவில்லாமல் கதகளி ஆடியிருக்கிறார். அப்பாவி முகத்துடன் வலம்வரும் அவருக்குப் பின்னான அந்த இன்னொரு முகம், அதற்கான பின்னணி என அனைத்துமே வித்தியாசமான களத்தைக் கொண்டிருப்பது கூடுதல் பலம்.
காவல்துறை அதிகாரி அர்விந்த மாதுராக சன்னி தியோல் அட்டகாசமான கம்பேக் கொடுத்திருக்கிறார். எந்த வித பில்டப்பும் இல்லாமல் ஸ்க்ரிப்ட் கேட்கும் கதாபாத்திரமாக மட்டுமே அவர் வந்து போவது சிறப்பு. கேஸை அவர் துப்பறியும் முறையும், உண்மைகளை அவர் கண்டறியும் பாணியும் சுவாரஸ்யமான ஸ்டேஜிங். சினிமா ரிப்போர்ட்டர் நாயகியாக ஸ்ரேயா தன்வந்திரி. சீரியல் கில்லரைப் பிடிக்க உதவி செய்வதாகக் கூறிவிட்டு, பின்னால் பயத்தால் அலறும்போது பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரேயாவின் தாயாராக, தமிழ்ப் பெண்ணாகவே வரும் சரண்யா பொன்வண்ணன் தான் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். வழக்கமாக அவருக்குக் கிடைக்கும் அம்மா ரோல்தான் என்றாலும், இதில் அவரின் வசனங்களும் நடிப்பும் வேறொரு டோனைக் கொடுக்கின்றன. சைக்காலஜிஸ்டாக வரும் பூஜா பட்டுக்குப் பெரிய வேலையில்லை. அனைத்து துப்பறியும் பணிகளையும் சன்னி தியோலே செய்துவிடுவதால், சில முக்கியமான வசனங்கள் மட்டுமே பூஜாவுக்கு!
இதுவரை ஃபீல்குட் எமோஷனல் படங்களால் நம்மை நெகிழச்செய்த இயக்குநர் பால்கி, முதன்முறையாக ஒரு சீரியஸான சீரியல் கில்லர் கதையுடன் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். சீரியல் கில்லர் உருவாவதற்கான காரணத்திலிருந்து, அவர் டார்கெட் செய்யும் ஆட்கள் வரை அனைத்துமே புதுசு கண்ணா புதுசு. சினிமா விமர்சனம் என்ற பெயரில் நியாயமே இல்லாத முறையில் விமர்சனம் செய்யும் நபர்களை நேரடியாகவே சாடியிருக்கிறார். சீரியல் கில்லரின் கோபத்திலிருந்து தப்பிக்க, அனைத்து விமர்சகர்களும் பயந்துகொண்டு படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க, அப்போதும் கொலைகள் நடக்கின்றன. அதற்கான காரணம் அட்டகாசமான ஸ்க்ரிப்ட்வொர்க்.
எல்லாவற்றையும் தாண்டி படத்தில் வரும் குரு தத் குறித்த வசனங்கள், அவர் படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்துமே அற்புதமான நாஸ்டால்ஜியா. குரு தத்தும் அவர் கடைசியாக இயக்கிய ‘Kaagaz Ke Phool’ படமும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான அங்கம் வகிப்பது ஒரு சுவாரஸ்யமான மெட்டா (Meta) அனுபவமாகிறது. காதல் காட்சிகளின் பின்னணி இசைக்கும் அவரின் பாடல்களே ஒலிப்பது அதை இன்னமும் அழகாக்குகிறது. அதேபோல, அமிதாப் பச்சனுக்கான அந்த அழகிய பாராட்டுரையும் வரவேற்கத்தக்க முயற்சி.
வித்தியாசமான ஐடியா, சுவாரஸ்யமான, எதிர்பாராத நிகழ்வுகளை அடுக்கும் திரைக்கதை என அனைத்தும் இருந்தும் சில கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. தவறாக சினிமா விமர்சனம் செய்பவர்கள், நன்றாக இல்லாத படத்தை நன்றாக இருப்பதாகச் சொல்வது, நன்றாக உள்ளதை நன்றாக இல்லாததாகச் சொல்வது, என்பதெல்லாம் தவறுதான் என்றாலும், விருப்பு, வெறுப்பு என்பதே இங்கே தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. ஒரு படைப்பு எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டும் அல்லது எல்லோராலும் வெறுக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமற்ற அணுகுமுறையே. அதைத் தவிர்த்து நிறை, குறைகளைப் பேசி நடுநிலையாக விமர்சனம் செய்யலாம் என்ற கருத்து மட்டுமே ஏற்புடையதாக இருக்கிறது.
இது குறித்து நாயகி ஸ்ரேயா கடைசியில் கொலைகாரனிடம் கேட்கும் அந்தக் கேள்வி முக்கியமானது. ஆனால், அத்தனை முக்கியமான விஷயத்தை போகிற போக்கில் கடந்து போனது ஏமாற்றமே!
இயக்குநரான செபாஸ்டியன் கோம்ஸ் என்ற பாத்திரம் ஏன் சீரியல் கில்லாரானான் என்ற ஃப்ளாஷ்பேக் காட்சியும் க்ளைமாக்ஸில் நமக்கு அவசர அவசரமாகப் போட்டுக் காட்டப்படுகிறது. அதைக் காட்டிய விதத்தில் இன்னும் ஆழம் இருந்திருக்கலாம்.
விமர்சகர்கள் பயந்துகொண்டு பாசிட்டிவ் விமர்சனங்கள் தருவது, முன்னர் ஃப்ளாப்பான ஒரு படம், இந்த சீரியல் கில்லர் கதையில் சம்பந்தப்பட்டு இருப்பதால், அது பின்னர் ஓ.டி.டி-யில் சூப்பர் வரவேற்பைப் பெறுவது போன்றவை சமகால சினிமா போக்கு குறித்த தரமான நையாண்டிகள். இப்படியான ஐடியாக்களுக்காகவே இந்த ‘Chup: Revenge of the Artist’ ஒரு அட்டகாசமான திரையனுபவமாக மாறுகிறது. கொடூரமான கொலைகள் மட்டுமே இது ஒரு குடும்பப்படமாக மாறுவதைத் தடுத்திருக்கின்றன.
★★★★★ – முன்னர் கொடுத்த இந்த ஸ்டார் ரேட்டிங், கொலைகாரன்/இயக்குநர் செபாஸ்டியன் கோம்ஸ் எடுத்த அந்தப் படத்திற்குத்தான். சீரியல் கில்லரான அவர் என் வீட்டுக் கதவைத் தட்டாமல் இருக்க, இந்த ரேட்டிங். அட்டகாசமான படம் செபாஸ்டியன் ப்ரோ!