புகழ்பெற்ற மோட்டார் ரேஸான `மோடோ ஜிபி’ அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. டோர்னா ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபேர்ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
2023-24 சீசன் முதல் 2030-31 வரை மொத்தம் 7 ஆண்டுகள் இந்தத் தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. ஃபார்முலா 1 ரேஸ்கள் நடந்த புத் சர்வதேச ரேஸிங் சர்கியூட்டில் நடக்கும் இந்த ரேஸ்களுக்கு, `கிராண்ட் ப்ரீ ஆஃப் பாரத்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவிலான விளையாட்டு தொடர்களை நடத்துவதில் இந்திய மும்முரம் காட்டி வருகிறது. உலகத்தின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்ப விளையாட்டு ஒரு மிகப்பெரிய கருவியாகப் பயன்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கான அண்டர் 17 ஃபிஃபா உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கிறது. கடைசி 2 ஹாக்கி உலகக் கோப்பைகளும் ஒடிசாவில் நடந்தது. செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓப்பன் WTA போன்ற போட்டிகளை நடத்தியது சென்னை.
இதன் அடுத்த கட்டமாக மோடோ ஜிபியை இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
உலகின் முன்னணி பைக் ரேஸர்கள் பங்கேற்கும் தொடரான மோடோ ஜிபி, ஒலிம்பிக், ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களுக்கு அடுத்து அதிகம் பேரால் பார்கப்படும் விளையாட்டுத் தொடராக விளங்குகிறது. சுமார் 70 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தத் தொடர் இந்தியாவில் பெரிய அளவு பார்க்கப்படுவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அதை தொடர்ந்து பார்க்கின்றனர். ஃபார்முலா 1 தொடருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இங்கு இல்லை. கியாகோமா அகோஸ்டினி, வேலன்டினோ ரோஸி போன்ற நட்சத்திரங்கள் இங்கு பிரபலமாக இருந்தாலும், இந்தியர்கள் கொண்டாட பெரிதாக எதுவும் இல்லாமல் இருந்தது.
ஃபார்முலா 1 தொடரில் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் போன்ற இந்திய வீரர்கள் பங்கேற்றதால் அத்தொடர் இன்னும் பிரபலமானது. ஃபோர்ஸ் இந்தியா அணி இத்தொடரில் பங்கேற்றது, இந்திய ரசிகர்கள் அதை கவனிக்க இன்னொரு காரணமாக அமைந்தது. 2011 முதல் 2013 வரை அந்த ரேஸ் இந்தியாவிலும் நடந்தது. இப்படி பல காரணங்கள் அந்த விளையாட்டை இந்தியாவில் பிரபலமாக்கியது.
இப்போதும் கூட ஃபார்முலா 2 தொடரில் இந்திய வீரர் ஜெகன் துருவாலா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவில் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் மோடோ ஜிபி இப்போது முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.
அடுத்த ஆண்டு எலக்ட்ரானிக் கார்கள் பங்கேற்கும் ஃபார்முலா இ ரேஸ் ஹைதரபாத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் மோடோ ஜிபி தொடரும் இந்தியாவுக்கு வருவது இந்திய மோட்டோர் ரேஸ் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகை ஒளிபரப்புத் துறைக்கு மிகப் பெரிய சந்தையாக விளங்கும் நிலையில், இந்த நகர்வு மோட்டோர் ரேஸிங்குக்கும் மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது.
இந்தத் தொடர் நடத்தப்படும் புத் சர்வதேச ரேஸிங் சர்கியூட் உத்திர பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைந்திருக்கிறது. 5.125 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த டிராக்கை ஜெர்மனியைச் சேர்ந்த டிராக் வடிவமைப்பாளரான ஹெர்மன் டில்கே வடிவமைத்தார்.
2011 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்ட இந்த டிராக்கை முடிக்க சுமார் 2000 கோடி ரூபாய் செலவானது. 2011 முதல் 2013 வரையிலான ஃபார்முலா 1 இந்தியன் கிராண்ட் ப்ரீ ரேஸ் இங்கு நடந்தது. அந்த மூன்று ரேஸ்களிலுமே ரெட் புல் அணியைச் சேர்ந்த அப்போதைய உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்றார்.
அதன்பிறகு ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப், MRF சேலஞ்ச், ஃபார்முலா ரீஜனல் சாம்பியன்ஷிப் இந்தியா போன்ற தொடர்கள் இந்த சர்கியூட்டில் நடைபெற்றன. கார் ரேஸிங்குக்காக வடிவமைக்கப்பட்ட இதில், பைக் ரேஸுக்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மோடோ ஜிபி தொடர் இங்கு நடக்கவிருப்பதால் சுமார் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ரேஸ் நடக்கும் வார இறுதி நாள்களில் மட்டும் 5000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்தத் தொடர் உத்திர பிரதேசத்தில் நடப்பது பற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
“பிரபலமான ஒரு விளையாட்டுத் தொடரை நடத்துவதில் உத்திர பிரதேசம் பெருமை கொள்கிறது. இது எங்களின் சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதாக மட்டுமல்லாமல், உலக அரங்கில் உத்திர பிரதேசத்தை உலக வரைபடைத்தில் வைக்க உதவும். இந்தத் தொடர் நடத்துவதற்கு எங்கள் அரசு அனைத்து விதத்திலும் உதவும்” என்று கூறியிருக்கிறார்.