புதுடெல்லி: ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகள் வழங்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது,’ என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதை முன்னிட்டு, இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் இதுவரை 3.95 கோடி பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பயனாளிகள் மொத்தம் ரூ.45,294 கோடி மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். 19 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்றுள்ளனர்.
முன்பு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தினமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தினமும் 4 முதல் 5 லட்சம் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதை தினமும் 10 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.100 கோடி செலவிடப்படும். குறைந்த செலவில் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது,’ என தெரிவித்தார்.