வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியுயார்க்: அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள், இந்தியா மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்களால் ஒருபோதும் இந்தியாவை வெல்ல முடியாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியுயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்து உடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த கேள்விக்கு அவர் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ உள்பட பல செய்தி நிறுவனங்களை மறைமுகமாக விமர்ச்சித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: இங்குள்ள (அமெரிக்கா) ஊடகங்களை நான் பார்க்கிறேன். அவர்களில் சிலர் இங்கிருந்து கொண்டு என்ன எழுதுகிறார்கள் என்று உங்களுக்கும் தெரியும். அதில் பாரபட்சம் உள்ளது என்பது எனது பார்வை. பாரபட்சத்திற்கான முயற்சிகளும் உள்ளன. இந்தியா எந்த அளவுக்கு அதன் வழியில் செல்கிறதோ, இந்தியாவின் பாதுகாவலர்கள், இந்தியாவின் உருவாக்குபவர்களாக கூறிக்கொள்பவர்கள் இந்தியாவில் தங்கள் நிலையை இழந்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற விவாதங்களை இந்தியாவிற்கு வெளியே உருவாக்குகிறார்கள்.
இப்படிபட்டவர்களால் ஒருபோதும் இந்தியாவில் வெற்றி பெற முடியாது. அதனால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவை தீர்மானிக்க முயல்கிறார்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். இதுகுறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இங்குள்ள அமெரிக்கர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது, அங்குள்ள சிக்கல் என்ன என்பது குறித்து தெரியாது என்பதற்காக மட்டும் நான் இதனைச் சொல்லவில்லை. நாம் ஒதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காகவும், நம்மைப் பற்றி மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அதனால் இதனை நாம் முக்கியானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement