தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்
தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை கூட்டும் தேதி தொடர்பாக சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்படும், அதன்பின்னர் சபாநாயகர் சட்டப் பேரவை கூடும் தேதியை அறிவிப்பார்.
ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த அமைச்சரவைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடைந்தது. 30 நிமிடங்களே நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.