மதுரை: அதிமுக ஆட்சிக்காலத்திலேயே லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தெரிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் உதயகுமார், என்மீது பல கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அர்த்தமற்ற, தவறான தகவலை கூறியுள்ளார். இந்தாண்டு, மின் கட்டணம், சொத்துவரியை உயர்த்தியதால், கடந்தாண்டு நிதி பற்றாக்குறையை குறைத்ததாக கூறியுள்ளார்.
இலவச லேப்டாப், இருசக்கர வாகனம், தாலிக்குத்தங்கம் திட்டங்களை நிறுத்தியதாக அவர் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகள் நிதியில்லாமல் அவர்களின் திட்டங்களை அவர்களே நிறுத்தி விட்டனர். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, 4 ஆண்டுகளாக தாலிக்குத் தங்கமும், நிதியும் கொடுக்காமல் நிறுத்தி விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தப் பின்பு, அதே திட்டத்தில், ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, படிப்புத்தொகையாக கொடுக்கிறோம். இத்திட்டத்தை நிறுத்தியது அதிமுகதான். உதயகுமார் பொய் சொல்கிறார். ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை அதிமுக அரசு ஒரே ஆண்டில் நிறுத்தி விட்டது. ஒன்றிய அரசு நிதி மேலாண்மை வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு, ஒன்றிய அரசு வகுத்து கொடுத்த நிதி எல்லையை காட்டிலும் குறைவாகத்தான் எடுத்தோம்.
ஆனால் ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியான அதிமுக, ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் ஒளிவுமறைவாக எடுத்தனர். இவ்வளவு கடன் கூடுதலாக வாங்கியும் எப்படி அவர்களை தப்பிக்கவிட்டனர். டாடி பசங்களை பார்த்துக்கொண்டார். டாடி அவர்களை கொண்டு கொள்ளவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக நிதி எடுத்த விபரம், மத்திய தணிக்கை அறிக்கையில் உள்ளது. இவர்கள் எங்களுக்கு நிதி மேலாண்மை பற்றி கூறுகிறார்கள். கொரோனா வரை ரூ.35 ஆயிரம் கோடியை பற்றாக்குறை காண்பித்து, கொரோனாவுக்கு பின்பு, ரூ.62 ஆயிரம் கோடியாக உயர்த்தி விட்டனர். அவர்கள் அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். தற்போது நிதி ேமலாண்மையை முறையாக கையாண்டு அதை நாங்கள் ரூ.46 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.