கோஹிமா: ”நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள்” என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளார். டெம் ஜெம் இம்னாவின் இந்த ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா சமூக வலைத்தளங்களில் பலராலும் கொண்டாடப்படுபவர்.
தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள டெம் ஜெம் இம்னா, தற்போது வெளியிட்டு இருக்கும் ட்விட் பதிவு இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது.
பிரபலத்தை போல உணர்கிறேன்
பொது இடம் ஒன்றில் டெம் ஜெம் இம்னாவை பார்த்த மக்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கும் டெம் ஜெம் இம்னா, அதில் போட்டு இருக்கும் கேப்ஷன் தான் தற்போது ஹைலைட் ஆகி இணையவாசிகளை கிரங்கடித்துள்ளது. அப்படி என்ன தான் அவர் கேப்ஷன் பதிவிட்டுள்ளார் என்றால், ”நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்” என்று பதிவிட்டு இருந்த்நார்.
உணவுதான் வாழ்க்கை
டெம் ஜெம் இம்னாவின் இந்த ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு பதிவை இம்னா வெளியிட்டு இருந்தார். அதில், ”வாழ்க்கை ஒரு பயணம், பயணத்தை ரசியுங்கள், உணவுதான் வாழ்க்கை, ஒருபோதும் உங்கள் உணவை தவற விட்டு விடாதீர்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.
ரயில்வே நிர்வாகம் பாராட்டு
இந்த பதிவோடும், ராஜ்தானி ரயிலில் கொடுக்கப்பட்ட உணவனான சப்பாத்தி, அரிசி சாதம், தால், கறி, ஆம்லேட் உள்ளிட்ட உணவு வகைகளையும் பகிர்ந்து இருந்தார். அமைச்சர் டெம் ஜெம் இம்னாவின் இந்த பதிவும் இணையத்தில் வேற லெவலில் ஹிட் அடித்து இருந்தது. அமைச்சரின் இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்த ரயில்வே சேவா நிர்வாகம், ”உங்களின் கருத்தை பதிவிட்டதற்கு நன்றி. உங்களின் இந்த கருத்து எங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்ற எங்கள் குழுவை ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டு இருந்தது.
கண்கள் சிறியதாக இருந்தால்..
இதற்கு முன்பாக தனக்கு சிறிய கண்கள் இருப்பதால் ஏராளமான பலன்கள் இருப்பதாக இம்னா வெளியிட்ட ஒரு ட்விட் பதிவும் டிரெண்ட் ஆகியிருந்தது. அதாவது, ”சிறிய கண்களாக இருப்பதால் அதிக தூசுகள் என் கண்களுக்குள் செல்ல முடியாது. அதேபோல், நீண்ட நேரம் நிகழ்ச்சி நடைபெற்றால் என்னால் மேடையில் இருந்தாலும் கூட எளிதாக தூங்கிவிடமுடியும்” என ட்விட் செய்து இருந்தார். இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது.