ஆதரவற்ற நிலையில் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்… கண்டுகொள்ளுமா அரசு?!

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-ல் உச்சத்தை எட்டியது என்றாலும், 1937-களிலேயே தொடங்கிவிட்டது. 1938-ல் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற நடராசன் உடல் நலம் குன்றி 1939, ஜனவரி 15-ல் காலமானார். மொழிப்போராட்டத்தின் முதல் களப்பலி இவர்தான். இவரைத் தொடர்ந்து, தாலமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 1939 மார்ச்- 31-ல் உயிரிழந்தார். 

நடராசன் தாலமுத்து

தியாகிகள் இருவரின் உடல்களும்  வண்ணாரப்பேட்டையில்  உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இதேபோல், தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தருமாம்பாள் கல்லறையும் இங்குதான் அமைந்திருக்கிறது. இப்படி, முக்கியத்துவம் வாய்ந்த மூலக்கொத்தளம் மயானம் இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் காண நேரடி விசிட் செய்தோம். 

மயானத்தின் உள்ளே நுழைந்தால் இரண்டு பக்கமும் கல்லறைகளும், அதைச் சுற்றி முட்புதர்களும் மண்டிக் கிடந்தன. அண்மையில் பெய்த மழையால் நினைவிடம் செல்லும் வழி முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. தாலமுத்து, நடராசனின் நினைவிடம் நோக்கி தார்சாலை அமைத்ததாகச் சொல்லப்பட்டாலும், குண்டும், குழியுமாகவே காட்சியளித்தது.  

நினைவிடத்தில் இருதயராஜ்

ஒருவழியாக நினைவிடம் வந்தடைந்தோம். நினைவிடத்தின் மேல் ஆடுகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. அப்போது, எங்களைப் பார்த்து அருகே வந்த நபர், “என்ன சார்… யார் நீங்க” என்றார். நாங்கள் விவரத்தைச் சொல்ல, உடனே பேச ஆரம்பித்தார். “சார் என்னோட பேரு இருதயராஜ். இங்கேதான் இருக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் ஜனவரி 24-ம் தேதி மாநகராட்சி ஆட்கள் வந்து சுத்தம் செய்வாங்க. மத்த நாள்களில் இந்த இடத்தை யாரும் கண்டுக்குறது இல்ல. நினைவிடத்தில் பெயின்ட்கூட அடிக்கிறதில்ல.  பராமரிப்புக் கிடையாது. நாலு மாசத்துக்கு முன்னாடி மாநகராட்சி கமிஷனர் வந்தார். நினைவிடத்துக்கு அருகில் பூங்கா வருது’னு சொல்லிட்டு சென்றார். இப்போதுதான் அந்த வேலையே ஆரம்பிச்சிருக்காங்க. நைட் டைம் லைட்  இருக்காது. சமூக விரோதிகள் குடிச்சிட்டு பாட்டிலை சமாதி முன்னாடியே போட்டுட்டு போய்டுவாங்க. நான்தான் இங்கிருந்து எடுத்து போடுவேன்” என்றார் வருத்தத்தடன்.

சமூக நீதி போராளி டாக்டர் தருமாம்பாள் கல்லறை

இது குறித்து, மதிமுக வடசென்னை கிழக்கு  மாவட்டச்  செயலாளர் ஜூவனிடம் பேசினோம், “2018ல் மூலக்கொத்தளம் மயானத்தை அ.தி.மு.க அரசு கைப்பற்றி கட்டடங்களைக் கட்ட முயற்சி செய்த்து. அப்போது, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினோம். பின்னர், திட்டம் கைவிடப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை தவிர மற்ற நாள்களில் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நினைவிடம் பெரியாரால் நிறுவப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த நினைவிடத்தைச் சுற்றி வேலி அமைத்து, மின்சார விளக்குகள் போட வேண்டும். நினைவிடம் அருகே பூங்கா அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள அழியும் நிலையில் உள்ள நினைவிடங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார். 

ககன்தீப் சிங் பேடி

இதுபற்றி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, நினைவிடத்தை மேம்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவென  மேயர்  தெளிவாக  பதிலளித்துவிட்டார். தமிழக அரசின் கொள்கை முடிவின்படியே மாநகராட்சியின் நடவடிக்கைகள் இருக்கும்” என்றார். 

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் அரசு தமிழ் மொழியை காக்க போராடி உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடங்களை பாதுகாக்குமா?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.