ஆர்எஸ்எஸ் ஊர்வல அனுமதியை திரும்பெறக்கோரி திருமாவளவன் மனு தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி வழங்கிய நிலையில், அந்த  உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆகஸ்டு 2ந்தேதி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதியும் நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கியுள்ளது. ஊர்வலத்தின்போது, கம்பு, லத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது.

தற்போது, பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

அக்டோபர் 2ல் வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளோம். அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,  அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.